யாழ்ப்பாணம் பழைய பூங்கா என்று அழைக்கப்படுகின்றதும் யாழ்.மாவட்டச்
செயலகத்திற்கு முன்னாலுள்ளதுமான பூங்காவை தமிழ் மக்கள் பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடுகின்ற யாழ்.மாநகர சபை சிங்கள மக்களுக்கு கட்டணம் அறவிடுவதில்லையென்று குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.
தமிழ்ப் பிரதேசத்தில் தமிழ் அதிகாரிகளால் ஆளப்படுகின்ற ஒரு சபை தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும் சிங்கள மக்களுக்கு இன்னொரு நீதியையும் அமுல்படுத்துகின்றமை தொடர்;பாக மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த பழைய பூங்காவில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்தது. பின்னர் காவல்துறை பணிமனை இயங்கியது. புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்குச் சென்ற பின்னர் இது பற்றைகள் மண்டியதாக இருந்தது.
இந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்தப் பூங்காவை தன்வசப்படுத்திய வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பூங்காவைப் புனரமைப்பு என்ற பெயரில் இங்கிருந்த பழைமையான சின்னங்களை மாற்றியமைக்க முற்பட்டார். இதற்காக இங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்கள் கனரக வாகனங்களின் உதவியுடன் தகர்க்கப்பட்டன. ஆனால், இந்தச் செயலுக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் யாழ்.மாநகர சபையிலுள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
பல தரப்பினரதும் எதிர்ப்புக்களால் நிலை குலைந்த ஆளுநர், தமிழ் கலாசாரத்தின் அடிப்படையிலேயே இந்தப் பூங்கா புனரமைக்கப்படும் என்றும் உடைக்கப்பட்ட சின்னங்கள் பழைய முறையிலேயே நவீனமயமாக கட்டியெழுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பூங்கா புனரமைக்கப்பட்டு பசில் ராஜபக்ச, ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் யாழ்.மாவட்ட படைத்தளபதி ஹத்துறுசிங்க ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. (புனரமைப்புக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியில் பல லட்சம் ரூபா நிதியை ஆளுநர் சுருட்டியது வேறு கதை) ஆனால், இந்தப் பூங்காவை யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களிடமிருந்து கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாவும் பெரியவர்களுக்கு 20 ரூபாவும் அறவிடப்படுகின்றது. ஆனால், மாற்றுப் பாதையூடாக சிங்கள மக்கள் உள்ளே சென்று எதுவித கட்டணமும் இன்றி இந்தப் பூங்காவில் பொழுதுபோக்கிச் செல்கின்றனர்.
தமிழ்ப் பிராந்தியத்திலுள்ள யாழ்.மாநகர சபையே தமிழ் மக்களுக்கு ஒரு நீதி சிங்கள மக்களுக்கு இன்னொரு நீதி என்று நடைமுறைப்படுத்துவதை யாரிடம் சொல்லி முறையிடுவது என்று தமிழ் மக்கள் கவலையுடன் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ் மாநகர சபை தேசவிரோத சக்தியான ஈ.பி.டி.பி யின் வசம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ் மாநகர சபை தேசவிரோத சக்தியான ஈ.பி.டி.பி யின் வசம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment