April 24, 2014

யேர்மனியில் நடைபெற்ற அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள்!

பூபதி அம்மாவின் தற்கொடை தமிழர்களின் விடுதலைப் போருக்கு பலம் சேர்த்தது. குடும்பபாசம், குடும்பபற்று
என்பதற்கப்பால் இனப்பற்று,மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவற்றுடன் தேசியத் தலைவர் மீதுபற்று,என்பவையும் இணைந்ததாக இந்தியப் படையினருக்கு தமிழ்மக்கள் சார்பான பாடத்தைப் புகட்டியிருந்தது.
எண்ணற்ற போராளிகள், எண்ணற்ற மக்கள் சிந்திய செங்குருதியினால் சிவந்த மண்ணில் இருண்ட வாழ்க்கையில் எழுந்து நின்ற மக்கள் எப்போதும் தேசியத் தலைவர்மீது அளவற்றபற்று வைத்திருந்தார்கள் என்பதை அன்றும் இன்றும் கண்டு கொண்டிருக்கிறோம்.

அந்தவகையில் அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளில் நாட்டுப்பற்றாளர்கள் நினைவாகவும்  அன்னையின் ஈடுஇணையில்லா ஈகத்தினை நினைவுகூர யேர்மனி பேர்லின் நகரில் உணர்வுபூர்வமாக    மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுச்சுடர் நிகழ்வுடன் ,தேசியக்கொடி ஏற்றப்பட்டு  ஈகைச்சுடர் , மலர்வணக்கத்தை  தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.  தாயகத்தாயின் நினைவு பாடல்கள், எழுச்சி நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து தமிழ் பெண்கள் அமைப்பு பூபதி அம்மா ஈகம் பற்றியும், புலம்பெயர் தமிழ்ப்பெண்களின் பணிபற்றியும் "புதுமைப் பெண்" எனும் கவியரங்கம் நிகழ்த்தினர் .

 உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமது வாழ்வோடு,தமக்கென்றோர் நாடு வேண்டும் என்ற உணர்வோடு, ஒலிக்கின்ற குரல் ஒருமித்து உரக்கின்றபோது உலகின் குரலும் இணைந்து உருவாகின்ற நாடாக தமிழீழம் என்ற எமது தாய் நாடு அமையும் எனும் உறுதி மொழியுடன்  
நினைவு நாளின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை தொடர்ந்து தேசியக் கொடி இறக்கப்பட்டு வணக்க நிகழ்வு  நிறைவுபெற்றது  .



















No comments:

Post a Comment