April 22, 2014

பிரான்சில் இடம்பெற்ற அன்னை பூபதி 26 ஆவது ஆண்டு நினைவும் நாட்டுப் பற்றாளர் நாளும்!

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 26 ஆவது ஆண்டு நீங்காத நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தியாக வணக்க நிகழ்வும் பிரான்ஸ்
பாரிசின் புறநகர்ப் பகுதியான ஒல்னே சு புவா நகரில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பும் ஒல்னே சு புவா தமிழ்ச்சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது. ஈகைச்சுடரை 07.04.2009 அன்று ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த மாவீரர் கயல்விழி அவர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. எழுச்சி நடனங்களை ஒல்னே சு புவா தமிழ்ச் சோலை, பாரிஸ் 17 தமிழ்ச்சோலை, செல் தமிழ்ச்சோலை, செவ்ரோன் தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவிகள் மிகவும் உணர்வுபூர்வமாக வழங்கியிருந்தனர்.பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் 'ஈழத்தாயின் கதறல்" என்ற நாடகம் தாயகத்தில் சிறிலங்கா இனவாதத்தினால் பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்முன்னே நிறுத்தியது.பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினரின் கவிதை சிறப்பாக இருந்தது.செல் தமிழ்ச் சோலை மாணவ மாணவிகளின் 'ஈழத்தமிழர்கள்" என்ற நாடகம் அனேக புலம்பெயர் தமிழ் மக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டியது. புலம்பெயர் தமிழ் சிறார்கள் அவசியம் தமிழ் கற்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் காட்டியது.

புலம்பெயர் தமிழ் சிறார்களின் நடிப்புத் திறமை அனைவரையும் பாராட்ட வைத்தது.தொடர்ந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் மோகன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்கள் அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எமது தமிழீழக் கனவை நிறைவேற்றமுடியும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எமது தேசியத்துக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மக்கள் பேரவையின் செயற்பாடுகள் பற்றியும் பேரவையுடன் இணைந்து செயற்படும் படியும் அவர் குறிப்பிட்டார்.'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலைத் தொடர்ந்து 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு தமிழீழத் தாயவளுக்கு வணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment