July 23, 2016

காணாமல் போனோரின் தந்தை, காணாமல் போகச்செய்த தந்தையாக மாறிய துரதிருஷ்டம்!

ஒருகாலத்தில் காணாமல் போனோரின் தந்தையாக வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, தடம் மாறி தற்போது காணாமல் போகச் செய்த தந்தையாக மாற்றம் பெற்றிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.


இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமொன்றை உருவாக்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

இது மனித உரிமை ஆர்வலர்களின் கடும் விமர்சனத்தைச் சம்பாதித்துள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் பீ.பீ.சி. சந்தேசய சிங்கள ஒலிபரப்பில் கருத்து வெளியிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் மஹிந்த ராஜபக்சவின் சந்தர்ப்பவாத செயற்பாடுகள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளதுடன், கடும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.

ரைட் டு லைப் அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலத்தில் ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை குறித்து பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

அக்காலத்தில் அவர் அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வாறான அமைப்புகளின் செலவிலேயே ஜெனீவா வரை சென்றிருந்தார்.

அதுமட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று , அதற்கு முந்திய ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தினரை கடுமையாக குறைகூறியிருந்தது.

சந்திரிக்காவின் அரசாங்கத்தில் மஹிந்தவும் ஒரு முக்கிய அமைச்சராக இருந்தார். ஆனால் மஹிந்த அப்போது அதனை எதிர்க்கவில்லை.

தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவே மஹிந்த தற்போது இவ்வாறான ஒரு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்.

அதே நேரம் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் எதுவித அதிகாரமும் அற்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது மட்டுமே அதற்கான அதிகாரமாகும்.

அதற்குக் காரணமானவர்களை தண்டிப்பதற்கு அதிகாரமில்லாத இந்தக் கட்டமைப்பினால் எதுவித பயனும் இல்லை என்றும் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment