August 5, 2016

அரசியல் கைதிகள் மீண்டும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் எட்டாம் திகதி தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் ஒருநாள் அடையாள கவனயீர்ப்பு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது நியாயமான விடுதலையை வலியுறுத்தி மூன்று சுற்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

அதன்போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் எமக்கு பல வாக்குறுதிகளையும் காலத்தவனைகளையும் வழங்கி எமது அகிம்சை அமைதிவழிப் போராட்டத்தினை இடைநிறுத்தி இருந்தனர்.

ஆனாலும் இதுவரை அவை எதுவும் ஆக்கபூர்வ செயற்பாட்டு நிலையை எட்டவில்லை இருந்தும் அரசியல் சவாலிற்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்ப்படுத்த எண்ணவில்லை.

அதனாலையே நாம் அடையாள கவனயீர்ப்பு உணவுத் தவிர்ப்புபிணை அனுஷ்டித்து எமது விடுதலைக்கான வாக்குறுதிகளை வலியுறுத்தி நினைவூட்டுகின்றோம்.

எனவே எமது நல்லெண்ணத்தை இவ் நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொள்ளும் என நம்புவதுடன் அனைத்து அரசியல் கைதிகளுக்குமான புனர்வாழ்வுப் பொறிமுறையினை மேற்கொண்டு எமதுவிடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2012ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், சிறைக்குள் ஏற்ப்படுத்தப்பட்ட கலவரத்தினால் அரசியல் கைதிகளான விமலரூபன் மற்றும் டில்ரோக்ஷன் ஆகியோர் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்து எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment