July 23, 2016

ஐ.நாவில் இரகசிய வாக்கெடுப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக, நாளை வியாழக் கிழமை பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரிதிநிதிகளும், நிரந்த உறுப்புரிமை அற்ற ஏனைய 10 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கின்றனர். ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு வாக்களிப்பதற்காக ‘ஊக்குவிக்கின்றோம்’ , ‘ஊக்குவிக்கவில்லை’ மற்றும் ‘எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை’ ஆகிய 3 தெரிவுகளின் அடிப்படையில் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகின்றது.

இந்த வாக்களிப்பின் பிரகாரம் ‘ஊக்குவிக்கின்றோம்’ என்ற தெரிவு அதிகமாக வழங்கப்படும் வேட்பாளர், பாதுகாப்பு சபை சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்படவிருக்கிறார்.அதனையடுத்து பொதுச் செயலாளரைத் தெரிவு செய்வதற்காக ஐ.நா. பொதுச் சபையில் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும், இதிலும் யார் அதிக ஆதரவு வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரே, அடுத்த ஐ.நா பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள 12 பேரில், 6 பெண்கள் உள்ளடங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர்களில் ஒருவர் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்படுவாராயின், ஐ.நா சபை வரலாற்றில் முதலாவது பெண் பொதுச் செயலாளார் என்ற பெருமை வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment