July 23, 2016

இந்திய மீனவர்களை தடுக்க ஒரே வழி துப்பாக்கி பிரயோகம்: மஹிந்த!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களின் பிரசன்னத்தை தடுக்க ஒரே வழி அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு கடற்படைக்கு அனுமதி வழங்குவதே என மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


ஆனால் அவ்வாறானதொரு அனுமதியை வழங்கும் சட்டமூலத்தை இலங்கை அரசு அமுல்படுத்தாது என்ற நிலையிலேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல் கைமீறி போகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண மீனவ சங்கத் தலைவர்களுடனான விசேட சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், இந்திய மீனவர்களை கைது செய்வதிலும் பார்க்க அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவது கடற்படைக்கு இலகுவான விடயமாகும். கடற்படை இந்திய மீனவர்களை விரட்டுவதற்காக மாத்திரம் ஒரு தடவைக்கு 200 மில்லியன் ரூபா எரிபொருளை செலவு செய்கின்றது. கடற்படைக்கு ஒதுக்கப்படும் நிதியில் நான்கில் ஒரு பகுதி இந்திய மீனவர்களின் ஊடுருவல்களை தடுப்பதற்கான முயற்சிக்கே பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் யுத்தம் ஒன்றை தொடுக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. அந்தவகையிலேயே கலந்துரையாடல் மூலம் சுமூகமான தீர்வு காண்பதற்கு நாம் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம்.

அத்துடன் அத்துமீறும் வெளிநாட்டு மீனவர்களை கைதுசெய்வது தொடர்பிலான சட்டமூலத்தில் பல்வேறு திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி, தண்டப் பணத்தை அதிகரித்தல், படகுகளை பறிமுதல் செய்தல், கைது செய்யும் மீனவர்களை விடுவிக்க படகு உரிமையாளர்கள் நேரில் வருதல் போன்ற பல திருத்தங்கள் கொண்டுவரப்படுமெனவும் அமைச்சர் சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment