July 23, 2016

வடக்கில் சிங்கள குடியேற்றத்தை தீவிரப்படுத்த சதி; விசேட செயலணி!

வட மாகாணத்தில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தீவிரப் படுத்தும் நோக்கிலேயே வட மாகாணத்திற்கென விசேட அதிகாரங்களைக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கியுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


வட மாகாண சபையின் 57 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது இந்த செயலணியின் நோக்கமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வட மாகாணத்தில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தலைமையில் அமைச்சர்கள் மூவர் அங்கம் வகிக்கும் விசேட செயலணியொன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணி விசேடமாக வடக்கு மாகாணத்தில் பூர்வீகமாக வாழ்ந்த சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வட மாகாண மீள்குடியேற்றத்திற்கான இந்த செயலணிக்குள் திருகோணமலை மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனாலேயே அரசாங்கத்தின் செயலணி கபட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒன்று என்று தெரிவித்து அதனை நிராகரித்து நேற்றைய தினம் வட மாகாண சபையில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், குறித்த செயலணி தொடர்பில் சந்தேகம் வெளியிட்டார்.

வட மாகாண பிரதி அவைத் தலைவர் – ”வட மாகாணத்தில் அதிகளவிலான மக்கள் குடியேறிவிட்டார்கள். குடியேற வேண்டியவர்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றார்கள். இந்தியாவிற்குச் சென்றவர்களும் குடியேற வேண்டிய தேவை இருக்கின்றது. அவசரமாக அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதற்கு உள்நோக்கம் உண்டு என்றுதான் கருதுகின்றோம்.

இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீள்குடியேற்றம் செய்வதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இது உள்நோக்கத்தோடு, ஏதோவொரு திட்டமிட்ட குடியேற்ற முயற்சி என்றுதான் நான் கருதுகின்றேன். மீள்குடியேற்றம் என்பது பொதுமக்கள் எங்கிருந்து சென்றார்களோ அந்த இடத்தில் கொண்டு வந்து இருத்துவதுதான் மீள்குடியேற்றம்.

கொக்குளாய் முகத்துவாரத்தில் இருந்த தமிழ் மக்களை புளியமுனை என்ற இடத்தில் குடியேற்றிவிட்டு, மீள்குடியேற்றம் என்று சொல்கின்றார்கள். ஆகவே அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள். கொக்குளாயில் இவர்கள் மீள்குடியேற வேண்டிய தேவை இருக்கின்றது. இது அமைக்கப்பட்ட குழுவுக்கு தெரியாது.

கொக்குளாயில் 84 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சூனியப் பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற நேரத்தில் சிங்கள மக்களை குடியேற்றினார்கள். அவர்களை மீள்குடியேற்றி அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தை கொடுப்பது தான் இந்த முயற்சி.

எங்களுடைய செயற்பாடுகளை எங்களுடைய அதிகாரங்களை கட்டுப்படுத்துகின்ற உரிமை மத்திய அரசாங்கம் எடுக்குமேயாக இருந்தால் மாகாண சபை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சிதான் இது மாற்றுக் கருத்து இல்லை. இந்த செயலணியில் மக்கள் பிரதிநிதி சார்பாக பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் இரண்டு தமிழ் பிரதிநிதிகளாவது அதில் சேர்த்திருக்கலாம். இதில் பெரிய தவறு ஒன்று நடைபெறப்போவதாக தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றேன்.

குடியேற்றம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். கொக்குளாயில் சிங்கள மக்கள் அனுமதி இல்லாமல் குடியேறி மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் கடற்கரையில் வள்ளங்களை போட்டு மீன்பிடிக்க முயற்சி செய்த போது, அங்குள்ள பௌத்த பிக்கு மற்றும் பதவியா முல்லைத்தீவு, கொக்குளாய் பொலிஸ் வந்து தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

இது வல்லாதிக்க சக்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்ற முயற்சி. இதற்கு இந்த குழு வலு சேர்க்கப் போகின்றது. வலு சேர்த்தால் இது பெரிய மோதலாகத்தான் வெடிக்க இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment