July 23, 2016

1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம்! தீபச்செல்வன்!

கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து முப்பத்திரண்டு வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது.
இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது.

இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் என்ற உகளாக உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது. சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜுலையின் சாட்சியங்கள் இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கறுப்பு ஜுலைக் காலத்தில் குழந்தைகளாயும் கருவுற்றும் இருந்தவர்கள் இன்றும் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு தமிழரும் தனக்கு புத்தி ஏற்படுகிற காலத்தில் தனது இனத்தை குறித்து அறியத் தொடங்கும் காலத்தில் கறுப்பு ஜுலையைத்தான் முதலில் படிக்கிறார். ஈழத் தமிழ் இனம் எதிர் கொண்ட வரலாற்றின் மிகப் பெரும் பயங்கரத்தை படிப்பவர்கள் எல்லோரது நெஞ்சும் உடைந்து போகின்றன.

1983 ஜுலை 23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு லெப்.கேணல் கிட்டு, லெப்.கேணல் விக்டர், லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் அப்பையா, லெப்பினன் செல்லக்கிளி அம்மான், மேஜர் கணேஸ் உட்பட்ட போராளிகள் தாக்குதிலில் ஈடுபட்டார்கள்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள் முதன் முதலில் திருநெல்வேலியில் நடத்திய தாக்குதல் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பலாலியில் இருந்து விடுதலைப் புலிகளை தாக்கும் திட்டத்துடன் வந்த இராணுவ அணியினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதலை நடத்தினர். கண்ணிவெடித் தாக்குதலையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதல் சமரில் 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் மேற்க் கொண்ட இந்தத் தாக்குதலை அடுத்து கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

தமிழர்கள் சிங்களவர்களை கொன்று விட்டார்கள் என்று கொதித் தெழுந்த சிங்களக் காடையர்கள் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கும் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு நகரமே ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்பாராத வகையில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகரில் வேரோடியிருந்த அவர்களின் வாழ்க்கை பலமாகவும் செழிப்பாகவும் இருந்தது. தமிழர்களோடு தமிழர்களிடமிருந்த வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. தமிழர்கள் தெருத் தெருவாக பிடித்து வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று காடையர்கள்படுகொலைகளை நிகழ்த்தினார்கள். வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கி எறித்தார்கள். வன்முறைத் தாக்குதல்களில் தமிழர்களின் சொத்துக்களையும் சூறையாடினார்கள். கொழும்பில் உயிரைக் காக்க தமிழர்கள் அலைந்தார்கள்.

மத நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் உயிரை காக்க தஞ்சமடைய தமிழர்கள் ஓடினார்கள். சிங்களக் காடையர்களோ தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்கள்.

வயது முதிர்ந்தவர்கள் முதல் அனைவரும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள். சிங்களக் காடையர்களுடன் புத்த பிக்குக்களும் பொல்லுத்தடிளுடனும் வாட்களுடனும் தமிழர்களைத் தேடித் தேடிக் வெட்டி அடித்துக் கொல்ல அலைந்தார்கள். சுற்றிச் சுற்றி நடத்தப்பட்ட இந்தப் படுகாலை ஈழத் தமிழர்களை உலுப்பிப் போட்டது. தமிழ் இனத்தில் பெரும் காயத்தை கீறியது.

இந்த வன்முறை நாட்களில் இலங்கை முழுவதும் வன்முறைகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஜுலை 24 மற்றும் 25ஆம் நாட்களில் இராணுவத்தினரால் படுகொலைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழர்கள் புலிகள் என்ற பேரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள்.

53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் துன்புறுத்திப் படு கொலை செய்யப்பட்டார்கள். ஜுலை 25 அன்று 33 கைதிகளும் ஜுலை 28 அன்று 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

இந்த இனப் படுகொலை யாவும் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்தை அழித் தொழிக்கவும் இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு அரிசியல் படுகொலையாகவே நடந்திருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழப் போராட்டம் மலர்ந்திருந்த அந்த நாட்களில் போராட்டத்தை முடக்கவே இந்தப்படுகொலை அப்போதைய அரசால் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

சுகந்திர இலங்கை எனக் கூறப்பட்ட காலத்தின் பின்னர் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களைத் துடைக்கவும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. அதன் உச்ச கட்டமாக கறுப்பு ஜுலை அரங்கேறியது.
 
ஈழ - இலங்கை அரசியல் நில முரண்பாட்டை கறுப்பு ஜுலைப் படுகொலையின் இரத்தம் தெளிவாக பிரித்து வரைந்திருக்கிறது. இலங்கைத்தீவை சிங்களவர்களிடம் வெள்ளையர்கள் கையளித்து விட்டுப் போனதிலிருந்து தமிழர்களுக்கான அரசியல் மற்றும் உரிமை நிராகரிப்புக்கள் ஏற்படத் தொடங்கின. தமிழர்கள் உரிமையற்றவர்களானார்கள். தமிழர்களிடத்தில் இருந்து சிறியளவான அரசியல் இடங்களும் சிங்கள ஆளும் தரப்புக்குப் பிரச்சினையாக இருந்தது.

தமிழ் அரசியல்த் தலைவர்கள் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளை கோரி வந்த சூழலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருந்த பிரதேசங்களில் ஒடுக்முறைகளும் இன வன்முறைகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. இலங்கைக்கு சுகந்திரம் கிடைத்தது என்ற பொழுது சிங்களவர்கள் தமிழர்ளை அழிக்கத் தொடங்கினார்கள்.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து தனிச்சிங்களச்சட்டமும் பௌத்த மயமாக்கலும் பிரகடனப் படுத்தப்பட்ட வேளை தமிழர்கள்மீதான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்டது. 1956இல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனவெறி வன்முறை தாக்குதல் கல்லோயா குடியேற்றத்த திட்டத்தில் அரற்கேற்றப்பட்டது. இதில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்hர்கள். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்கள்மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே கல்லோயா குடியேற்றத்திட்டதில் இனவெறி வன்முறை வெடித்தது. இந்தத் தாக்குதலும் ஈழப் போராட்டத்தின் அவசியத்தை தமிழர்களுக்கு உணர்த்தி அவர்களின் தாயகம் பற்றிய அக்கறையை ஏற்படுத்தியது.

மீண்டும் 1958இல் இனக்கலவரம் வெடித்தது. பொலனறுவையில் தொடங்கி கொழும்புவரை நடந்த இந்த இனவெறித்தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலின் பொழுது தமிழர்களும் திருப்பி சிங்களவர்களைத் தாக்கத் தொடங்கியிருந்தார்கள். கத்திகளுடனும் பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையார்கள் தமிழர்களை வெட்டி, குத்தி தீயிட்டு எரித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் பொழுது 11 பேர் இலங்கை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 1977இல் மீண்டும் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் 500க்கு மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டார்கள். இதில் அநுராதபுரம் பகுதியில் தொடரூந்திற்காக நின்ற மக்களும் வெட்டிச் சாய்த்துக் கொல்லப்பட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியான வன்முறையாக 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்டது. தென் கிழக்காசியாவில் மிகப் பெரிய நூலமாக 97 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களுடன் இருந்த யாழ் நூலகம் ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று, பண்பாட்டு, அறிவுப் பொக்கிசமாக விளங்கியது. அந்த யாழ் நூலகத்தை 31 மே 1981 அன்று சிங்களக் காடையர்கள் தீயிட்டு எரித்து அழித்தார்கள்.

தமிழர்கள்மீதான வன்முறைகள், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்ததைத் போலவே யாழ் நூலக தீயிடலும் அரசியல் பழி வாங்கலாக நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் யாழ் நூலகத்துடன் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கைத் தீவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறிப் படுகொலைகள், வன்முறை நடவடிக்கைகள் எல்லாமே தமிழர்கள்மீதான அரசியல் உரிமை மறுப்பிற்காகவும் ஒடுக்குமறைக்காகவுமே மேற்கொள்ளப்பட்டன.

அதனுடைய உச்சக் கட்ட வன்முறையாக நிகழத்தப்பட்ட கறுப்பு ஜுலை ஏற்கனவே அந்தக் காலப் பகுதியில் அப்போதைய அரசால் திட்டமிடப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட வன்முறை அரங்கேற்றப்படடது. தமிழ் அரசியல் போக்கை மழுங்கடித்து ஈழத் தமிழர்களின் உணர்வின் கூர்மையை மழுங்கடித்து சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்கள்மீது திணிக்கவே இந்த வன்முறைகள் நடத்தப்பட்டன.

பேரினவாத அரசியலுடன் தமிழ் அரசியல் தலமைகள் நடத்திய போராட்டத்தின் தோல்வி நிலையிலும் தமிழர்கள்மீதானபடுகொலைக்கு எதிராகவுமே விடுதலைப் புலிகளும் ஏனைய போராளி இயக்கங்களும் தேற்றம் பெற்றன. தனி ஈழம் என்கிற போராட்டமுமு; பரிணமித்தது.

இலங்கையை ஆண்டு வந்த ஒவ்வொரு அரசும் தமிழர்கள்மீது வன்முறைகளையும் படுகொலைகளையும் திணித்து தமிழ் அரசியலை ஒடுக்குவதில் ஒரே விதமாகவே செயற்பட்டார்கள்., செயற்பட்டு வருகிறார்கள். கறுப்பு ஜுலையுடன் தமிழர்கள்மீதான வன்முறைப் படுகொலைகள் முடிந்து போகவில்லை.

1987இல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை ஒப்பிரேசன் லிபிரேசன் என்ற நடவடிக்கையின் மூலம் கைப்பற்றும் தாக்குதல் யுத்தத்தை இலங்கை இராணுவம் தொடங்கியது. ஆதன் பிறகு யுத்தச் சமர்கள் மூலமாகவும் தமிழிழனப் படுகொலை மிக அதிரகித்து. அதன் பின்னர் தமிழர்கள் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தொடர் படுகொலைகளில் அழிக்கப்பட்டார்கள். அந்தபடுகொலை இன்றைய காலம் வரை தொடர்நகிறது.

வல்வை நூலகப் படுகொலை, குமுதினிப் படுகொலை, அம்பாறை உடும்பன் குளம் படுகொலை, கொக்கட்டிச் சோலைபடுகொலை 1987, வீரமுனைப் படுகொலை, சத்துருக் கொண்டான் படுகொலை, யாழ் நாகர்கோவில் சிறுவர்படுகொலை, நவாலி தேவாலயப்படுகொலை, களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை, பிந்துணுவோவா படுகொலை, செஞ்சோலைப் படுகொலை போன்றவைகளுடன் இவைகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கையின்படுகொலைகள் உதிரியாகவும் தொகுதியாகவும் நடந்துள்ளன. அத்தோடு நான்காம் ஈழப் போரில் மட்டக்களப்பு 2006படுகொலைகள், யாழ்ப்பாணப் படுகொலைகள், வன்னிப் போர்ப் படுகொலைகள் 2006-2009மே, அதன் பின்னரானபடுகொலைகளும் என்று ஈழத் தமிழ் இனம் படுகொலைகளால் எச்சரிக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு அழித் தொழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே வரலாற்றுத் துயரமாகவும் தொடர்கிறது.

1983 ஜூலை இனப்படுகொலை நடந்து இன்று முப்பத்திரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் தமிழ் இனத்தை  அழிப்பது தொடர்பில் இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசுக்கும் குற்ற உணர்வு வரவில்லை. மாறாக தொடர்ந்தும் ஒவ்வொரு அரசுகளும் இனப்படுகொலைகளையே ஒன்றை ஒன்று விஞ்சி மேற்கொள்கிறது.

முப்பது வருடங்களாக ஏற்படாத நல்லிணக்கமும் புரிதலும் இனி எப்போது ஏற்படும்? இன்னமும் ஈழத் தமிழர்கள் அழித்தொழிக்கபபட வேண்டியவர்களாகவும் எந்த ஒரு உரிமையுமற்றவர்களாகவே ஒடுக்கப்படுகின்றனர். முப்பது வருடங்களாக ஒடுக்கி அழிக்கும் ஒரு தரப்போடு இணைந்து வாழச் சொல்வது என்பது இனப்படுகொலைகளினால் அழிந்து போகச் சொல்வதே.

இவை எல்லாமே இணைந்த தேசத்தில்  சிங்கள தேசம் ஈழ மக்களுக்கு உரிமைகளை பகிரவும் சமமாக நடத்தவும் மறுத்திருக்கும சூழ்நிலையை மாத்திரம; உணர்த்தவில்லை. சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் ஒரு இனம் இதையெல்லாம் எவ்வாறு மன்னிப்பது? ஒடுக்கி அழிக்கப்புடும் தரப்பு நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்றபோது நல்லிணக்கம் என்பதே இன அழிப்பு எனும்போது இழந்த தேசத்தை மீள நிறுவி வாழ்வதே ஒரு இனத்திற்கு பாதுகாப்பானது.

இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது. அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது.

மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள். தெற்கில் கட்டவிழ்த்து விடப்பட்டபடுகொலைகள் வடக்கு கிழக்கில் யுத்தம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜுலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் கடந்தென்ன என்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜுலையும் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.

No comments:

Post a Comment