July 11, 2015

வவுனியா பிரஜைகள் குழுத்தலைவருக்கு TID யினர் இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (62வயது) அவர்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவின் (ரி.ஐ.டி) விசாரணைக்காக இரண்டாவது தடைவையாகவும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசம் நெடுங்கேணி நகரத்தில் அமைந்துள்ள அவரது பத்திரிகை விற்பனை நிலையத்துக்கு, நேற்று முன்தினம் (10.07.2015) மாலை 3.00 மணியளவில் சிவில் உடையில் சென்ற மூவர்,
தாம் பயங்கரவாத தடுப்புப்பிரிவின் வவுனியா அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகவும், கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவின் 02ம் மாடிக்கு, நாளை (11.07.2015) காலை சென்று அதிகாரி விமலசூரியவை சந்திக்குமாறு அறிவுறுத்தி, அதற்குரிய அழைப்பாணை கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் ‘கொழும்பு செல்வதற்கான கால அவகாசம் போதாது’ என்று கி.தேவராசா அவர்கள் கூறியதையடுத்து, அங்கிருந்துகொண்டே தமது தொலைபேசியில் கொழும்புக்கு அழைப்பை ஏற்படுத்தி பேசிய அவர்கள், 15.07.2015 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு சென்று அதிகாரி விமலசூரியவை சந்திக்குமாறு கூறிவிட்டுச்சென்றுள்ளனர். ஏற்கனவே கி.தேவராசா அவர்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவின் (ரி.ஐ.டி) 02ம் மாடிக்கு, 30.03.2015 அன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் 10.10.2014 வெள்ளிக்கிழமை (ஈழ பெண்கள் எழுச்சிநாள்) அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ நடத்தவிருந்த நிலையில்,
குழுவின் தலைவர் கி.தேவராசா மீது 08.10.2014 அன்று இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து இரும்பு கம்பிகளால் கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டு பற்றைக்காட்டுக்குள் அவர் தூக்கி வீசப்பட்டிருந்தபோது அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமையும், பின்னர் அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு அனுப்ப நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி (சிங்களவர்) மறுத்திருந்தநிலையில், அன்றைய வன்னி மாவட்;ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவமோகனும் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று நள்ளிரவு 12.00 மணியளவில் அவரை வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விசாரணை தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமுக அமையம் கி.தேவராசா அவர்களுக்கு தேவையான சகல சட்ட ரீதியான உதவிகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குவதற்குரிய உத்தரவாதத்தை வழங்கியுள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.
thevarasa

No comments:

Post a Comment