April 22, 2015

சொந்த மண்ணுக்குத் 25 வருடங்களின் பின் திரும்பிய தாயின் சோகம் (படம் இணைப்பு)

வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கெொண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத நிலையில்
மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த உடனேயே எங்கள் சொந்த மண்ணுக்கு வந்துவிட்டோம்.
இங்கே வீடு இல்லை. வீடு ஒன்றை கட்டுவதற்கு எங்களிடம் வசதியும் இல்லை. எங்களுக்கு ஒரு அரைநிரந்தர வீட்டையேனும் அமைத்துக் கொடுங்கள் என வலி.வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட வீமன்காமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு வந்து சனசமூக நிலையத்தில் தங்கியிருக்கும் 3 பிள்ளைகளின் தாய் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 11ம் திகதி வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்த ஒரு பகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாலேஷ்வரன் காயத்திரி என்ற பெண் தனது கணவர் மற்றும் 3 சிறுபிள்ளைகளுடன் மீள்குடியேற்றத்திற்காக வந்து வீமன்காமம் வடக்கு காந்தி சமூக சேவா சனசமூக நிலையத்தில் தஞ்சம் புகுந்து தங்கியிருக்கின்றார்.
இந்நிலையில் குறித்த தாயுடன் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
1990ம் ஆண்டு நாங்கள் சிறுவர்களாக இடம்பெயர்ந்து சென்றோம். 25 வருடங்களில் பல துன்பங்களை அனுபவித்து அகதிகளாக 15ற்கும் மேற்பட்ட வீடுகளில் தங்கியிருந்து வாடகை கொடுத்து பல ஊர்களுக்குச் சென்று இப்போது எங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி வந்திருக்கிறோம்.
எனக்கு 3 பிள்ளைகள் கணவன் கூலி வேலை செய்பவர். இடம்பெயர்ந்து வாழும் காலத்தில் கணவருடைய உழைப்பு எங்கள் சாப்பாட்டிற்கும், வீட்டு வாடகை கொடுப்பதற்குமே சரியாகிவிடும்.
இந்த நிலையில் எமக்கென்று எதனையும் சேமிக்காத நிலையில் எப்படி வெறுங்கையோடு சொந்த மண்ணை விட்டுச் சென்றோமோ? அப்படியே வெறுங்கையோடு மீண்டும் எங்கள் சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறோம்.
எங்களுடைய சொந்த நிலத்தை விடுவிக்ககோரி நடத்தப்பட்ட அத்தனை ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டேன்.
மறவன்புலோ பகுதியில் இடம்பெயர்ந்து இருந்தபோதும் சகல போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டு எங்களுடைய மண்ணை விடுவிக்க கேட்டிருந்தேன்.
இப்போது விடுவித்திருக்கின்றார்கள். நான் எங்களுடைய மண்ணிலேயே மீள்குடியேற வந்திருக்கிறேன். ஆனால் என்னுடைய நிலத்தில் வீடு இல்லை. அதனால் இந்த சனசமூக நிலையத்தின் கட்டிடத்தில் பிள்ளைகளோடு தங்கியிருக்கின்றேன்.
எப்பாடு பட்டாலும் சொந்த மண்ணில் வாழவேண்டும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எங்களுக்கு ஒரு அரைநிரந்தர வீட்டையாவது பெற்றுக் கொடுங்கள் என அந்த தாய் மேலும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment