April 22, 2015

எண்ணையும் அரசியலும் கலந்துள்ள சுண்ணாகத்துத் தண்ணீர் - மக்களுக்கு பேய் காட்டும் வட மாகாணசபை!

சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து இருப்பதாகக்கூறி, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி சுன்னாகத்தைச் சேர்ந்த மக்களும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றம் சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் குரல் எழுப்பியும் போராட்டங்களை நடாத்தியும் வருகின்றனர்.

இதன் உச்சக்கட்டமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் 07.04.2015 இல் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தினை கைவிடுமாறு வடமாகாண முதலமைச்சர் வைத்த கோரிக்கையினை மக்கள் நிராகரித்தனர்.
பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதப்போராட்டம் இரண்டாவது நாளில் கைவிடப்பட்டது. இதற்கு முன்னதாக இவ்வருடம் ஜனவரியில், சுன்னாகம் சிவன் கோவிலிற்கு முன்பாக இதே பிரச்சனையை முன்வைத்து ஓர் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1995 இல் யாழ் மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பொழுது அம்மாவட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக, நொதேன் பவர் (Nothern Power) என்ற தனியார் நிறுவனம் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து டீசல் மின் பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கும் செயற்பாடுகளை சுன்னாகத்தில் ஆரம்பித்தது.
இந்த மின் பிறப்பாக்கிகளிலிருந்து கழிவாக வெளியேறும் எண்ணெய்களை அப்பகுதி நிலத்திலேயே ஊற்றப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய பகுதிகளில் கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலப்புகள் தென்பட்டன. இதனைத்தொடர்ந்து, 27.01.2015 இல் மல்லாகம் நீதவான் பிறப்பித்த நீதிமன்ற தடையுத்தரவு தீர்ப்பினால் நொதேன் பவர் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம், மல்லாகம் நீதவான் பிறப்பித்த இந்த தடையுத்தரவை நிராகரித்துள்ளதால், 06.04.2015 இலிருந்து மேற்படி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 இல் உடுவில் பிரதேச செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தி சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பில்  கழிவு எண்ணெய் படிமங்கள் இருப்பதாகக் கண்டறிந்தது. மின் உற்பத்தி நிலையத்தைச் சூழவுள்ள 3 கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் கழிவு எண்ணெய் கலந்திருப்பதாக அக்குழு கூறியது.
2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சுன்னாகம் நிலத்தடி நீரினை ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாண சபை ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அக்குழுவின் முதற்கட்ட பரிசோதனை முடிவுகளின் அறிக்கை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் யாழ்ப்பாணத்தில் 20.03.2015 இல் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் நிலத்தடி நீரில் உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மாசுக்கள் இல்லையென கண்டறியப்பட்டதாக அக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் இப்போது சுன்னாகம் நிலத்தடி நீர் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா? இல்லையா? என்பதில் அப்பகுதி மக்களிடையே குழப்ப நிலை காணப்படுகின்றது.

உலகில் 88% நோய்கள் அசுத்தமான நீரால்தான் உண்டாகிறதென கூறப்படுகின்றது. ஆனால் 12.04.2015 இல் யாழ் அரச செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டம் ஒன்றில் இந்த நிலத்தடி நீர் விவகாரம் குறித்து சுமார் 3 மணித்தியாலங்கள் ஆராயப்பட்டதன் பின்னர், சுன்னாகம் நிலத்தடி நீரில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு (ஹைட்ரோ காபன்) இல்லையென மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய மாசுக்கள் இருப்பதாகவும், இறுதி ஆய்வு அறிக்கை வரும் வரையில் பொறுத்திருக்க வேண்டுமென இக்கூட்டத்தில் மேலும் சொல்லப்பட்டுள்ளது. இக்கூட்டம் வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலைமையிலேயே நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய வடமாகாண முதலமைச்சர், தாம் அழைப்பு விட்டிருந்தவர்களைத் தவிர்ந்த ஏனையோர் கூட்டத்தில் தமது கருத்துக்களைத் தெரிவிக்கமுடியாது என்றும், பார்வையாளர்களாக மாத்திரமே இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் இக்கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இதிலிருந்து இவர்கள் உண்மை எதனையோ மறைக்க முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. தண்ணீரில் கழிவு எண்ணெய்யுடன் அரசியலும் மிதக்கின்றது.
விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் செய்த கூட்டமைப்பு இனிவரும் காலம் எதை வைத்து அரசியல் செய்யப் போகின்றது?

No comments:

Post a Comment