வடமாகாண விவசாய அமைச்சால் 23 விவசாயப் போதனாசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.09.2015) விவசாய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.
வடமாகாண விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 161. எனினும் 85 பேரே இச்சேவையில் இதுவரை பணியாற்றி வருகின்றனர்.
விவசாயப் போதனாசிரியர்களின் குறைவு விவசாய விரிவாக்க நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தமையால் விவசாய அமைச்சால் விவசாயப் போதனாசிரியர்களை புதிதாக உள்ளீர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாகவே தற்போது 23 பேருக்குப் புதிதாக நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் விவசாய டிப்புளோமாதாரிகளாகவும் 19 பேர் பட்டதாரிகளாகவும் உள்ளனர்.
விவசாயப் போதனாசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான தகுதி நிலையாக விண்ணப்பதாரி இதுவரை க.பொ.த உயர்தரத்தில் இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருப்பதோடு, விவசாயத்திலும் டிப்புளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எனினும், வடமாகாணத்தில் பட்டதாரிகளிடையே நிலவும்; வேலையில்லாப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு மத்திய அரசின் மூன்றாம் நிலைக்கல்வி ஆணையத்தின் அனுமதிபெற்று இப்போது முதற்தடவையாக விவசாயப் பட்டதாரிகளும் விவசாயப் போதனாசிரியர்களாக உள்வாங்கப்பட்டுள்ளளனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஆளணியில் மீதமுள்ள 53 வெற்றிடங்களில் 22 பேர் விவசாயப் போதனாசிரியர் பயிற்சித் தரத்தில் விரைவில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், மிகுதி வெற்றிடங்களை நிரப்;புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் ஜெ.ஜெயதேவி, ஸ்ரீ.அஞ்சனாதேவி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment