தமிழர் தாயகத்தில் தமது போக்குக்கு ஆடும் படையினர், இன்று தமது பார்வையை
மாணவர்களை நோக்கித் திருப்பியுள்ளனர். கடந்துவந்த காலங்களிலும் படையினர் மாணவர்களின் எழுச்சிகளை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியமை எமது நினைவைவிட்டு நீங்கிவிடமுடியாது. பேனாக்களை ஆயுதமாகக் கொண்டவர்களை இராணுவம் மற்றும் படையினரையும் குண்டர்களையும் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்தி மாணவர்கள் மனதில் தமிழ் தேசியம் என்ற வார்த்தையை மனதில் கூட நினைக்காத அளவிற்கு நடந்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் படையினர் மாணவர்களை நோக்கித் தமது அகலக் கண்களைத் திருப்பியுள்ளனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து தாயகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்ற சோதனை நடவடிக்கைகள் காரணமாக பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் செல்வதற்கு மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். படையினர் மாணவர்களிடமும் சோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிளிநொச்சியில் இராணுவத்தினர் பயன்படுத்துவதைப் போன்ற போலி இறப்பர் முத்திரை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உயர்தரம் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்னர்.
இதன் தொடர்ச்சியாக கடந்தவாரம் யாழ்ப்பாணம் - மானிப்பாயில் தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த மாணவர்களை மறித்த படையினர் அவர்களிடம் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொப்பிகளுக்கு நடுவே துண்டுப் பிரசுரங்களை வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்தச் சோதனை இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே மாணவர்களை மறித்துத் துண்டுப் பிரசுரங்கள் வைத்திருக்கிறீர்களா என்று விசாரணை நடத்தியதுடன் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சம்பவங்களை அடுத்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் படையினரதும் காவல்துறையினரதும் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே வீதியில் கொப்பிகளுடன் நின்றிருந்த மாணவர்களிடமும் படையினர் விசாரணைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்ற படையினர், அங்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களைச் சேகரித்துள்ளதுடன், அவர்களைப் புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் இது நடைபெற்றிருப்பதனால், அந்தப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், தமது மேலதிகாரிகளுக்கு முறையிட்டிருக்கின்றார்கள். வலயன்கட்டு, காக்கையன்குளம் உள்ளிட்ட பாடசாலைகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகத் தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.
இதுபற்றி கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அமைதி நிலவுகின்ற நேரத்தில் இவ்வாறு பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சமடையச் செய்யும் வகையில் படையினர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பாடசாலை நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் காரணமாக பாடசாலைச் சூழலில் பதற்ற நிலைமை உருவாகியிருப்பதாகவும் இதனால் அங்கு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலைகள் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்றுக்கொள்வதே முறையாகும். அவ்வாறில்லாமல், பாடசாலைகள் நடைபெறும் நேரத்தில் படையினர் அங்கு சென்று இவ்வாறு நடந்துகொள்வது தவறான காரியமாகும் என்றும் அவர் கூறினார். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், குறிப்பாக வடமாகாண முதலமைச்சரும் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுதிக் கொண்டு மாணவர்களுடைய தங்குமிட அறைகளை சோதனை மேற்கொண்டுள்ளதுடன், விடுதிக் காப்பாளர், மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவிலான இராணுவம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் படைக்கு ஆட்சேர்ப்பு செய்கின்ற படலம் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஒன்று படைகளின் யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படைக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்றும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ தாதிகள், கணனி வேலையாட்கள், மேசன் தொழிலாளர், தச்சுத் தொழிலாளர், தையல் வேலையாட்கள், முடி திருத்துநர் உட்பட 20 வரையான தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக படையினர் ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவித்துமுள்ளனர்.
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பலாலியில் மூன்று மாத பயிற்சி இடம்பெறுமென்றும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தொழில் என்றும் அந்த அறிவித்தலில் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்குமிடம், உடுப்புகள், உணவு போன்றன இலவசமாக வழங்கப்படும் என்றும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்றும் படையினர் கூறியிருக்கின்றனர். அத்துடன் இது ஒய்வூதிய உரித்துடைய நிரந்தர நியமனம் என்றும் அந்த அறிவித்தலில் படையினர் கூறியிருக்கின்றனர்.
இவ்வாறு இளைஞர், யுவதிகளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி படைக்கு ஆட்சேர்ப்புச் செய்கின்ற முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதை உலகத்துக்கு காட்டுவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிவில் பாதுகாப்புக் குழு என்ற பெயரிலும் பெண் படையினர் என்ற பெயரிலும் உள்வாங்கப்பட்ட பல பெண்கள் படையினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களில் சிலர் கருத்தரித்துமுள்ளனர். அவர்களுக்கு கட்டாய கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் தொழில் வாய்ப்பு என்ற பெயரில் படைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறுகின்றது. இதுதொடர்பாக பொதுமக்களும் இளைஞர், யுவதிகளும் அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவினர்கள் இதனை தமது தாயக உறவுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கும்போது எமது இளைஞர்களை இப்படித் தந்திரமாக ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தட்டிக்கேட்க யாரும் இன்றி நடைபெறும் சிறிலங்கா இராணுவத்தினரின் தமிழ்மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து புலம்பெயர் வாழ் மக்கள் ஒருமித்து சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக முறையிடும் தருணம் இது! வரும் மே தினத்தில் எமது உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போம்.
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment