June 20, 2016

உதய கம்மன்பிலவுக்கு ஜூலை 1 வரை மறியல்! - சிறையில் போட்டாலும் ஓயமாட்டேன் என்று 'பேஸ்புக்'கில் அவர் சூளுரைப்பு !

புதிய ஹெல உறுமயவின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார்.
நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஆஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மெவன் சில்வா தெரிவித்தார்.

விசாரணைகளின் பின் இன்று பிற்பகல் அவர், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சிறையில் போட்டாலும் அரசுக்கு எதிரான தனது போராட்டம் ஓயாது என உதய கம்மன்பில எம்.பி. தனது 'பேஸ்புக்' பக்கத்தில் இன்று பகல் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "கடந்த வியாழக்கிழமை என்னை விசாரணை செய்த பொலிஸார் இனி விசாரணை தேவையில்லையென தெரிவித்து அனுப்பிவைத்தனர்.

ஆனால், இன்று (நேற்று) காலை என்னைக் கைதுசெய்துள்ளனர். இதன் பின்னணியில் ஏதோ நோக்கம் உள்ளது. எப்படித்தான் கைதுசெய்தாலும் அரசுக்கு எதிரான எனது போராட்டத்தை நிறுத்தமாட்டேன். எப்படியும் இனியும் இந்தப் பதிவை பார்த்தப்பின்னர் எனது கையடக்கதொலைபேசியை பறித்துக்கொள்ளலாம். இதனால் யாரும் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டாம்" - என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment