August 11, 2016

தேசியத்தலைவரின் சிறு வியூகத்தால் ஸ்ரீலங்கா கடற்படையின் சக்கர வியூகத்தில் இருந்து தப்பிய கடற்புலிகளின் தாக்குதலணி!

சமாதானம் முடிந்து கிழக்கில் யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா யுத்தக்கப்பல் மற்றும் டோரா தாக்குதல் படகுகளை அழிப்பதற்காக கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களால்  திட்டம் தீட்டப்பட்டது.


அதன்படி செம்பியன்பற்றில் சூசை அண்ணாவின்  கட்டளை மையம் அமைக்கப்பட்டு, தாக்குதல் தளபதி செழியன் தலைமையில் 35 சண்டை படகுகள் மற்றும் கரும்புலிகள் படகுகளும் சண்டைக்குத் தயாராகின.

சூரியன் மறைந்தததும் சண்டைப்படகுகள் கடலில் இறக்கப்பட்டது. கடற்புலி போராளிகளும் சண்டைக்குச் செல்லும் உற்சாகத்தோடு தாக்குதலுக்கு தயாராகினர். சூசை அண்ணாவுடன்  தொலைத்தொடர்பு மற்றும் ரேடார் கண்காணிப்புக்காக கோபி அவர்களும்  தலைவர் அவர்களின் தனிப்பட்ட உதவியாளர் சிலம்பரசன் மற்றும்  கணினி மூலம் தகவல்களை உடனுக்குடன் தலைவருக்கு அனுப்ப ஒரு போராளியும் கட்டளை மையத்தில் இருந்தனர்.

தாக்குதலுக்கான அனைத்து தாயார்ப்படுத்தலும் பூர்த்தியாகி கடற்புலிகளின் சண்டைப்படகுகள் காங்கேசன்துறை நோக்கி நகரத்தொடங்கின. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சென்று கொண்டிருக்கும் அதே சமயத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் டோரா சண்டைப்படகுகளும் ஒவ்வொன்றாக காங்கேசன்துறை நோக்கி வரத்தொடங்கின.

இரவு ஒன்பது மணியளவில் தாக்குதல் தொடங்கியது. அந்த சமயத்தில் நான்கு டோரா படகுகளும் ஒரு யுத்தக்கப்பலும் காங்கேசன்துறை கடற்பரப்பில் தரித்து நின்றன. கடற்புலிகள் தாக்குதல் தொடங்கியதும் யுத்தக்கப்பல் சர்வதேச கடலை நோக்கி வேகமாக செல்லத் தொடங்கியது.

அதற்கு பாதுகாப்பாக நான்கு டோராக்களும் தாக்குதல் நடாத்தி கப்பலுக்கு பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கடற்கரும்புலிகள் டோரா ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி மூழ்கடிக்கச் செய்தனர்.

போராளிகளும் உற்சாகத்தோடு யுத்தக்கப்பலை அழிக்க வேண்டும் என்ற ஓர்மத்துடன் கடும் தாக்குதலை தொடுத்தவாறு முன்னேறிக்கொ ண்டிருந்தனர். கடலில் பெருமளவான கடற்புலி படகுகள் தாக்குதலில் ஈடுபடுவதை அவதானித்தது ஸ்ரீலங்கா கடற்படை. பின்னர்   திருகோணமலையில் இருந்து அடுத்தடுத்து டோரா படகுகள் வரத்தொடங்கின.

ஆனால் அவை தாக்குதலில் பங்குபெறாமல் ஆழ்கடலில் தரித்து நின்றன. இதை அவதானித்த கோபி அண்ணாவும் சூசை அண்ணாவிடம்  ‘’அண்ணா 15 இற்கும் மேல டோரா வருது என்ன செய்யலாம்?’ என கேட்டார். அதற்கு சூசை அண்ணாவும் ‘’விடு வரட்டும்.எத்தனை வந்தாலும் இண்டைக்கு ஒரு கை பாப்பம்’’ என கட்டளை தொனியில் கூறினார்.

சண்டை உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ஸ்ரீலங்கா கடற்படையின் டோராக்களை பலாலியில் இருந்து கடற்படையின் ஒரு கேணல் தர அதிகாரி வழிநடத்திக்கொண்டிருந்தார். மேலும் டோராக்கள் திருகோணமலையில் இருந்து வரத்தொடங்கின. கடைசியாக 24 டோரா தாக்குதல் படகு களத்தில் கடற்புலிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க தயாரானது.கடற்புலிகளால் யுத்தக்கப்பலை நெருங்க முடியவில்லை. ஒரு டோரா மூழ்கடிக்கப்பட்டு ஒரு டோரா சேதமாக்கப்பட்டது.

ஆனால் இப்போது நிலைமை மாறியது. அந்த 24 டோராக்களும் கடற்புலிகளின்  35 சண்டைப்படகுகளை உள்ளே விட்டு மகாபாரதத்தில் வரும் சக்கர வியுகம் போல் வியுகம்  அமைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சூசை அண்ணாவும் திகைத்து விட்டார். சண்டைக் களத்தில் கடற்புலிகளின் இரு படகுகள் தாக்குதலில் முழுமையாக சேதமடைந்தது. ஒரு கடற்கரும்புலிகளின் படகும் தாக்குதலில் எரிந்தது.

நான்கு திகைசைகளில் இருந்தும் தாக்குதல் நடந்துகொண்டிருக்க ,இன்னொரு புறம் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பல்குழல் பீரங்கித்தாக்குதலும் நடத்தத்தொடங்கினர். கடற்புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாத நிலை.அவர்களை சுற்றி 24 டோராக்கள்,மற்றும் பல்குழல் பீரங்கித்தாக்குதல்.

தளபதி சூசை அண்ணாவும் தளபதி செழியனிடம் ‘உடனே பின்னோக்கி வருமாறு கட்டளையிடுகிறார். ஆனால் டோராக்களின் தாக்குதல் கடுமையாக இருக்கிறது. தளபதி செழியனும் எங்களுக்கு உடன் உதவி தேவை இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் வீரமரணம் அடையவேண்டிய நிலைதான்  என சூசை அண்ணாவிடம்  கூறுகிறார்.

சூசை அண்ணாவும் விடுதலைப்  புலிகளின் பீரங்கிப்படைத் தளபதி மணி அவர்களை தொடர்பு கொண்டு ஆட்லறி உதவி கேட்கிறார். ஆனால் இரவு நேரத்தில் ஆட்லறித் தாக்குதல் நடத்தினால் எமது படகுகளும் தாக்குதலுக்குள்ளாகும் என அவர் கூறுகிறார்.

சூசை அண்ணாவும் எப்படியாவது ஸ்ரீலங்கா கடற்படையின் வியுகத்தை உடைத்து அனைத்து போராளிகள்,படகுகளை மீட்க வேண்டும் என உத்வேகத்தோடு செழியனிடம் கட்டளை பிறப்பிக்கிறார். ஆனால் கடலில் கடற்புலிகளின் மூன்று படகுகளின் ரேடார் சேதமடைகிறது.

கடலில் ரேடர் இல்லையெனில் கண்கள் இல்லாமல் படகு செலுத்துவதற்கு சமம். நிலைமை மோசமடைகிறது. வேறு வழியில்லாமல் தலைவரிடம் விமானப்படையின் உதவியை கேட்கிறார். அந்த சமயத்தில் தலைவர் கணினிமூலம் பாதுகாக்கப்பட்ட (encryption) குறுந்தகவல் மூலம் சூசை அண்ணாவிடம் இருந்து கள நிலவரத்தைகேட்கிறார்.

தலைவரிடமிருந்து கட்டளை வருகிறது.‘’சூசையிடம் சொல், விமானப்படையும் தேவையில்லை, வேறு எந்த உதவியும் வேண்டியதில்லை. செழியனுக்கு சொல். கரும்புலிப்படகுகள் முன்னோக்கி செல்ல பின்னால் அனைத்து சண்டைப்படகுகளும் ஒரே நேர்கோட்டில் வந்து அப்படியே தளத்துக்கு பின்வாங்குமாறு  சொல்’ என கட்டளையிடுகிறார்.

சூசை அண்ணாவும் உடனடியாக தகவலை செழியன் அவர்களுக்கு தெரிவிக்கிறார். அதன்படி முன்னாள் கரும்புலிப்படகுகள்,பின்னால் ஒரே நேர்கோட்டில் சண்டைப்படகுகள் என நகர்கிறது. அந்த சமயத்தில் எந்த டோராவும் தாக்குதல் நடத்தாமல் கடற்புலிகளின் படகுகள் வெளியேற வழி  விடுகிறது.

அதிசயம் என்னவெனில் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த அணைத்து டோராக்களும் தாக்குதல் நடத்தாமல் வியுகத்தை விட்டு கடற்புலிகளின் படகுகள் வெளியேற வழி  விடுகிறது. கடற்புலிகள் அணியும் தாக்குதல் எதுவும் நடத்தாமல் பின் வாங்குகிறது.

அதன் பிறகு தலைவர் வேறு எதுவும் கூறவில்லை.அமைதியாக உறங்கச்சென்று விட்டார். சூசை அண்ணாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘’அண்ணா அண்ணா தான்டா  பாத்தியா அவர்ட ஒரு சின்ன வியுகத்தால தப்பிட்டம்’’ என மகிழ்ச்சியோடு கூறினார். சண்டையில் அன்று நாம் தோற்றாலும் அனைத்து படகுகளும் சில போராளிகளின் இழப்போடு வந்து சேர்ந்தது போதும் என இருந்தது.

அந்த இடத்தில் ஸ்ரீலங்கா கடற்படை கட்டளை அதிகாரி தாங்கள் மீண்டும் தாக்குதல் தொடுத்தால் கடற்புலிகளின் தாக்குதலணி அனைத்தும் கரும்புலிப்படகுகளாக மாறினால் தமது கடற்படைக்கும் இழப்பு ஏற்படும் என்பதை அறிந்து தாக்குதலை தவிர்க்கவே விரும்பியுள்ளார். அத்தோடு காங்கேசன்துறை கடற்பரப்பில் இருந்து பின்வாங்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளிற்கு பின்னால் வந்துகொண்டிருந்த டோராக்கள் பின்னர் ஒவ்வென்றாக திருகோணமலை செல்லத் தொடங்கியது.

தேசியத் தலைவரின் அந்த ஒரு சிறு வியூகத்தால் அன்று தளபதி செழியன் உட்பட அணைத்து போராளிகளும் தளத்துக்கு திரும்பினார்கள்.













No comments:

Post a Comment