August 27, 2016

முதியவர்களின் இறுதிநாட்கள் இருள்சூழ்ந்த சுடுகாடாக மாறுவது எவ்வாறு?

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று பெற்றோரை தெய்வமாக வழிபட்டது ஒரு காலம். ஆனால் இன்று நவீனமான உலகிலே நாகரீகமான மனிதர்களோ அன்னையும் பிதாவும் பின்னுக்கு இடைஞ்சல் என்ற வாசகத்தை நெஞ்சங்களிலே வரைந்து வைத்துள்ளனர்.


எனவே தான் இன்று முதியோர் இல்லங்கள் அதிகமாக திறக்கப்படுகின்றனர். முதியோர் இல்லம் என்பது கம்பிகள் இல்லாத சிறை மட்டுமல்ல. அது ஒரு கொடிய வதை முகாமும் கூட.

வதை முகாம் என்றால் அங்கே யாரும் யாரையும் வதைப்பதில்லை. எவ்வளவு தான் அக்கறையுடன் அங்கே அவர்கள் பராமரிக்கப்பட்டதும் மனதால் தாம் அநாதையாகினோம், ஒதுக்கப்பட்டுவிட்டோம், அப்படி வாழ்ந்தோம் இப்படி வாழ்ந்தோம் என்று ஒவ்வொரு நொடியும் வதைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதை வார்த்தைகளால் வரைந்து விட முடியாது. அந்த அநுபவம் மிக கொடியது. இப்படி ஒரு கொடிய வாழ்வினை தமது பிற்காலத்தில் வாழ்வோம் என்று அவர்களில் எவருமே கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் ஏன் இப்படி ஒரு கொடுமைக்குள் தள்ளப்பட்டனர். அவர்களை இந் நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார்? என்ற கேள்விக்கான விடையினை அவர்களிடம் கேட்டால் தம் கண்ணுக்குள் மணியாக பேணி வளர்த்த பிள்ளைகள் என்று கூறும் போது அவர்களின் அடி வயிறு எரிவதை கண்ணீர் துளிகள் காணொளியாக காட்டுகின்றன.

நவநாகரீக விந்தை மிக்க உலகிலே வாழும் மனிதர்களின் உருவாக்கம் தான் இந்த முதியோர் இல்லங்கள் முதியோர் இல்லங்கள் என்று அழகாக பெயரிடப்பட்டது.

அது பால் குடித்த மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு போகும் மிருககாட்சி சாலை என்பது தான் உண்மை.

ஒரு மரம் பூக்கள் பூத்து காய்கள் கனிகள் என்று பயன்தருகின்ற போது கூடுகின்ற கூட்டம் அது முதிர்ந்த இலைகள் உதிர்ந்து பயன் தர மாறுகின்ற போது அதை ஒதுக்கி விடுவார்கள்.

இது உலக வழக்கம். ஆனால் மரம் கொடிகளை கோல மனிதர்களை ஒதுக்க முடியுமா? அதிலும் உயிர் கொடுத்த தகப்பனையும் உடல் கொடுத்த அன்னையும் பயனற்றவர்கள் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

பல நூறு புத்தகங்கள் உள்ள இடம் என்றால் அது முதியவர்கள் உள்ள இடம் தான். என்பதை நம்மில் அதிகமானவர்கள் இன்னமும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை

தாயையும் தந்தையையும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு கோயில் கோயிலாக அலைந்து என்ன பயன். என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

சரி இந்த முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களில் பிள்ளைகள் யார் என்பதை ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் சாதாரணமான கூலித் தொழில் செய்பவர்களோ சாதாரணமானவர்களோ அல்ல. படித்த நல்ல பதவியில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் வாழுகின்றவர்களுமே.

தாம் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக தமது தாய் தந்தைகளை அநாதைகளாக முதியோர் இல்லங்களில் தவிர்க்க விட்டுச் செல்லும் பிள்ளைகள் தமக்காக தமது தாய், தந்தையர்களை எத்தனை அரிய சந்தர்ப்பங்களை இழந்திருப்பார்கள்.

தமது வாழ் நாள் முழுதும் தமது பிள்ளைக்காக வாழ்ந்த அவர்களை இரக்கமின்று முதியோர் இல்லங்களில் தவிர்க்க விடுவது எந்த விதத்தில் நியாயம்.



இந்த உலகிலே செய்யத்தகாத பாவங்களிலே மிகவும்கொடிய பாவம் இந்த முதியவர்களை வதைப்பதும் தவிர்க்க விடுவதுமே.

ஆனால் ஆடு மாட்டை வதைத்தால் கூட குற்றம் என்று கூறும் சட்டங்கள் இந்த முதியவர் விடயத்தில் ஏனோ குருடாகிப் போய்விட்டதா? என்று சந்தேகம் எழுகின்றது.

எமது நாட்டினை பொறுத்தவரைக்கும் அதிகமான முதியவர்களில் கடசி நாள் மிகவும் கொடுமையானதாகவே அமைகின்றது.

நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து நமது எடையினை கூட தாங்க முடியாது மரணப்படுக்கையிலே இருகின்ற முதியவர்களுக்கு இருக்கின்ற ஓரே ஒரு ஆறுதல் தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சுற்றத்தாரின் அன்பும் ஆறுதலான வார்த்தைகளுமே.

ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் அவ்வாறான ஆறுதலான சொற்களை சொல்கின்றோம். எம்மை கண்ணின் மணி போல் காத்த தாய், தந்தையர்களை இன்று சுமையாக நினைப்பவர் தான் அதிகம்.

இதற்கான உதாரணமே இன்றைய முதியோர் இல்லங்கள். பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும் வாழ்வின் இறுதி நாட்களை மகிழ்வோடு கழிக்க வேண்டிய இவர்கள், முதியோர் இல்லங்களிலே நான்கு சுவர்களுக்குள்ளே மரண தேவனின் வருகைக்காக மனம் சொல்ல முடியாத சோகத்தோடு வாழும் வாழ்க்கை என்பது எவ்வளவு கொடியது என்பதை வாழ்ந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் நிலை இது என்றால் வீடுகளில் தமது உறவுகளோடு பிள்ளைகளோடு தங்கி வாழ்கின்ற ஒரு சில முதியவர்களில் நிலை மிகவும் பரிதபமாகவே மாறிவிடுகின்றது.

மாமணியே முத்தே ரத்தினம் என சீராட்டிய தாயையும் தகப்பனையையம் நாயே, பேயே, சனியனே, மூதேசியே என வாய் கூசாமல் திட்டும் நவீன மயமானமனிதர்களும் இதே சமூகத்தில் தான் வாழ்கின்றன.

இதை விட கொடுமையானது சுவாசிப்பதற்கே அல்லப்படும் அவர்களிடம் நீ எதை சம்பாதித்தாய் எனக்கு என்ன தந்தாய் உழைக்கின்ற போது உனக்கு சேமிக்கத் தெரியாதா?

இவ்வாறான கேள்விகளால் தினம் தினம் அவர்களை நோகடிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் இந்த சமூகத்தில் வாழ்கின்றனர்.

எனக்கு எதைத் தந்தாய் என்று கேட்க முன்னே இந்த உயிரையும் உடலையும் படைத்த தெய்வங்கள் அவர்கள் என்பதை ஏன் மறந்தோம்.

சேமித்து வைக்காத ஊதாரி என்று மரணப் படுக்கையில் கிடைக்கும் பெற்றோரைத் திட்டி தீர்க்கின்ற நாம் அவர்கள் விலை மதிக்க முடியாத சொத்தாக எம்மை நினைத்து தமது உழைப்பு அனைத்தையும் எமக்காகவே செலவு செய்தார்கள் என்பதை ஏன் சிந்திக்க தவறிவிட்டோம்.

மனிதன் பிறக்கும் போது எவ்வாறு குழந்தையாக பிறக்கின்றமோ, இறக்கும் போது அதே குழந்தை பருவத்தையே அடைந்து விடுகின்றான் என்பது இயல்பான ஒன்று.

நாம் குழந்தையாக இருந்த போது எமது மலத்தை கைகளால் அள்ளிச் சென்று சுத்தம் செய்யும் தாய், தந்தையர்கள் நடமாட முடியாது மலம் சலம் கழிக்கும் போது அதை முகம் சுழியாது, சினந்து கொள்ளாது சகித்து கொள்ளும் பிள்ளைகள் நம்மில் எத்தனையோ பேர் வாழ்கின்றோம்.

சிறு பருவத்திலே நாம் சிறு நீர் கழித்தால் அதை தீர்த்தம் என்று சொல்கின்ற எமது பெற்றோர்கள், நடமாட இயலாது மலம், சலம் என்பவற்றை படுக்கையிலே கழிக்கின்ற போது அவர்களை நாம் திட்டுவது கடிந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்.

இந்த உலகத்தையே எமக்கு காட்டிய எமது பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை வீட்டில் கொடிப் புறம் ஒதுக்கி வைத்து விடுவது எந்த விதத்தில் நியாயம். முதுமை என்பது அனைவருக்கும் வரும் என்பதை மறந்து முதியோர்களை மதிக்க தவறுகின்றோம்.

'காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்" என்பது பழமொழி. அந்த குருத்தோலைகளும் ஒரு முதிர்ந்து உதிர்க்கும் என்பதை இன்றைய மனிதன் சிந்திக்க தவறிவிட்டான்.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று ஆத்தி சூடி சொல்கின்ற சொர்க்கமும் தாய் தந்தையரின் காலடி என்ற கூறான் சொல்கின்றது.

தாய் தந்தைக்கு ஈடான செல்வம் இந்த உலகத்தில் வேறு ஏதும் இல்லை அப்படிப்பட்ட தாய் தந்தையர்களை அவர்களது பிற்காலத்திலேயே மகிழ்ச்சியாகவே மரியாதையாகவும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

எனவே முதியவர்களை மதித்து அவர்களின் இறுதி நாட்களை இனிதாக மாற்றி மனிதர்களாக வாழவேண்டும்.

No comments:

Post a Comment