August 2, 2016

சிறைசெல்லவும் தயார்; விமல் வீரவன்ச!

மைத்திரி – ரணில் இணைந்த தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிந்துள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தை ஒப்படைத்துச் செல்லாவிடின் முழுக் கொழும்பு நகரையும், அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பவற்றையும் முற்றுகையிடவிருப்பதாகவும் எச்சரித்தார்.


கடந்த 28ஆம் திகதி கண்டி – பேராதனையில் ஆரம்பமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினரது பாதயாத்திரை 5ஆம் நாளாளும் இறுதிதினமான நேற்று கொழும்பை வந்தடைந்தது.

பொது எதிரணியின் பாதயாத்திரை கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்து, அங்கு மக்கள் கூட்டமொன்றும் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தங்களை சிறையிலிடுமாறும், சிறை செல்வதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும் உரத்த குரலில் கூறினார்.

“ரணில் – மைத்திரி ஜோடி சேர்ந்த தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் ஒருவருடமும் 8 மாதங்களாகின்ற வேளையில் வீட்டிற்குச் செல்லுங்கள் என்ற செய்தியை வழங்குவதற்காகவே லிப்டன் சுற்றுவட்டத்திற்கு நாம் வந்துள்ளோம்.

தேசிய அரசாங்கம் பிக்குகளை சிறை தள்ளியே தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவேன் என்று சிறிசேன எப்போதும் நினைத்திருக்கவே இல்லை. விக்கிரமசிங்கவும் மேல் ஏறி கீழ் இறங்கிக்கொண்டிருந்தார். துரதிஷ்டவசமாக சிறிசேன ஜனாதிபதியாகவும், விக்கிரமசிங்க பிரதமராகவும் தெரிவாகியதை தொடர்ந்து நினைத்தபடி நாட்டை நடத்திச் செல்லலாம் என்று யோசித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஏற்றாற்போல் எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் இருக்கின்றார். கலப்பு நீதிமன்றம், நாட்டை பிளவுபடுத்தும் கொள்கை, புதிய அரசியலமைப்பு, இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, இராணுவத்தினரை இலக்காகக் கொண்ட அரசியல் பழிவாங்கல் என்பவற்றுக்கு எதிராகவே ஒன்றுகூடியுள்ளோம். ராஜபக்ச என்ற பெயர் கேட்டால்போதும் சிறைபிடிப்பார்கள்.

விஜேதாஸ ராஜபக்ச மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்த விரும்புகிறேன். ராஜபக்சக்களை சிறைதள்ளிய பின் யாராவது இருப்பார்களா என்று தேடும்போது நீங்களும் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எட்கா உடன்படிக்கை செய்தாலோ, போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைத்தாலோ அல்லது ஐக்கிய இலங்கையை சவாலுக்கு உட்படுத்தினாலோ முழுக் கொழும்பு நகரையும் முற்றுகையிடுவோம். கொழும்பில் குடியேறி, அலரிமாளிகையிலிருந்து விக்கிரமசிங்கவினதும், ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிறிசேனவினதும் குடியேற்றத்தை நீக்குவோம். இதற்காக சிறை செல்வதற்கும் நாம் தயார்” – என்றார்.

No comments:

Post a Comment