August 2, 2016

திருகோணமலையில் புதையல் தோண்டியவர்களுக்கு அபராதம்!

திருகோணமலை, தாவுல்வெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு பேரையும், இரண்டு குற்றங்களுக்காக தலா 45,000 ரூபாய் அபராதம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்று உத்தரவிட்டார்.


அடையாளப்படுத்தப்பட்ட புராதன இடத்துக்குச் சென்ற முதலாவது குற்றத்துக்காக தலா 20 ஆயிரம் ரூபாயும், அவ்விடத்துக்குச்சென்று புத்த சிலையின் வடிவத்தை மாற்றிய இரண்டாவது குற்றத்துக்காக தலா 25 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணமாகச் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி கோமரங்கடெவல பொலிஸாரினால் தாவுல்வெவ பகுதியில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்குமான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது

இதேவேளை, திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் காட்டுப்பகுதியில் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக தகவல் கிடைத்ததனை அடுத்து,

அக்காட்டுப்பகுதியை சுற்றிவளைத்து தாம் தேடுதல் நடத்தியதாகவும் இதன்போது, ஒரு பௌத்த பிக்குவும் ஒரு சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் உட்பட 04 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லையெனக் கூறிய பொலிஸார், திசையை அறிந்து கொள்வதற்கான வரைபடமொன்றைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment