August 22, 2016

வலி. வடக்கில் மேலும் 800 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் மேலும் 800 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
காங்கேசன்துறை கிழக்கு/233, காங்கேசன்துறை மத்தி J/234, காங்கேசன்துறை மேற்கு J/235, பளை வீமன்காமம் J/236, தையிட்டி J/250 போன்ற கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

 
எனினும், விடுவிக்கப்படும் காணிகளில், 460 ஏக்கர் காணிகள் மாத்திரமே மக்கள் மீள்குடியேற உகந்த பிரதேசமாக உள்ளதென யாழ்.மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வலி வடக்கில் 6 மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை பூர்த்தியாகுமென ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த போதிலும், குறித்த காலப்பகுதிக்குள் அவ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக இவ்வருட ஆரம்பத்தில் ஒரு தொகுதி காணியும் அண்மையில் காங்கேசன்துறை பிரதேசத்தில் ஒரு தொகுதி காணியுமே விடுவிக்கப்பட்டன. எவ்வாறெனினும், இவ்வருட இறுதிக்குள் வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment