July 17, 2016

லசந்த கொலை வழக்கில் கைதான புலனாய்வு அதிகாரி கருணா குழுவை வழிநடத்தியவர்!

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி, கருணா குழுவை வழிநடத்தியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரியாக சார்ஜன்ட் மேஜர், பிரேமானந்த உடலகம நேற்றுக்காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலையை நேரில் கண்ட சாட்சி ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, விசாரணைக்காக அழைக்கப்பட்ட சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உடலகம, விசாரணையின்  பின்னர் கைது செய்யப்பட்டார்.

நேற்று அவரை கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ள 48 மணிநேர அவகாசம் கோரினர். இதையடுத்து, 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் அனுமதி அளித்தார்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உடலகம, இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலியின் நெருங்கிய உதவியாளராவார்.

2009 ஜனவரி 8ஆம் நாள் லசந்த படுகொலை இடம்பெற்ற போது, இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் அன்சாருடன் இணைந்து பணியாற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா குழுவினரை, வழிநடத்திய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் குழுவிலும், சார்ஜன்ட் மேஜர் உடலகம இடம்பெற்றிருந்தார்.

அப்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண பணியாற்றியிருந்தார்.

இதன் பின்னர், 2010ஆம் ஆண்டு சார்ஜன்ட் மேஜர் உடலகம ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதரகத்திலும் பணியாற்றியிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கில் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெநாத் ஜெயவீர, அதுபற்றி கருத்து எதையும் வெளியிட மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment