பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளில், மேலும் 1500 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) குறித்த பிரதேசத்திற்குச் சென்று காணிகளை பார்வையிட்டதோடு, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார்.
இந்நிலையில், விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி தமது முடிவை அறிவிப்பார் என்றும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் சுமார் 6500 ஏக்கர் காணிகள் காணப்படும் நிலையில், அவற்றில் இதுவரை 1,953 ஏக்கர் காணிகளே கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியால் காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட காலம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படாமை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், பலாலியில் அமைந்துள்ள மேலும் 1500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை, அண்மையில் அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே நேற்றைய பலாலி விஜயம் அமைந்தது.
No comments:
Post a Comment