July 14, 2016

திருமலை கன்சைட் சித்திரவதைமுகாம் - கரனாகொட நன்கறிவார். சாட்சிகளுக்கு மரண அச்சுறுத்தல் தொடர்கிறது!

திருகோணமலையில் இயங்கிய கன்சைட் சித்திரவதை முகாம் மற்றும் திருகோணமலையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள், உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட அறிந்துள்ளமைக்கான சான்றுகள் உள்ளதென்று குற்றப் புலனாய்வுத் துறைப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொடவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர், நிசாந்த டி சில்வா கோட்டை நீதிவான் ஜயரத்தனவுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விடயத்தில் பிரதான சாட்சியாக கருதப்படும், சம்பவங்கள் இடம்பெற்ற காலப் பகுதியில் திருமலை கன்சைட் முகாமின்  அருகில் சேவையில் இருந்த லெப்டினன் கொமாண்டர் வெல்கெதரவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள் குறித்து சாட்சியம் வழங்கியமை காரணமாக குறித்த கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் கடற்படை விசேட உளவுப் பிரிவு பொறுப்பதிகாரி கப்டன் ரணசிங்க, மற்றும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி தகநாயக்க ஆகியோரால் இப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லெப்டினன் கொமாண்டர் வெலகெதரவின் குடும்பத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதேவேளை இதே பாணியில் கடற்படை உறுப்பினர் உபுல் பண்டாரவுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வசந்த கரனாகொட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்களுக்கு எதிராக செய்த முறைப்பாட்டை மேலதிக விசாரணைக்காக பொலிஸ் மா அதிபரால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமர்பிக்கப்பட்டது. இதன்போது கடற்படை குழுவொன்று கொழும்பு மற்றும் திருமலையில் வெள்ளை வானில் ஈடுபட்ட கடத்தல்கள் அம்பலமானது.

இந்த வழக்கு விசாரணை நேற்று, கோட்டை பிரதான நீதவான் லங்க ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட உறவுகள் தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆஜராகியிருந்தார்.

இதன்போது கன்சைட் நிலத்தடி வதைமுகாமில் திருமலை யில் 11பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வசந்த கன்னகொட நன்கு அறிவார் என்று குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதனகர், நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

சூடு பிடித்துள்ள இந்த விவகாரத்தில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி ஒருவரை நியமிக்க நீதவான் அறிவிருத்திருந்தார். அடுத்த மன்றில் அவர் ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவித்ததுடன் குறித்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 2இல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

No comments:

Post a Comment