July 14, 2016

சாதி ஒழியணும் அதுதான் முக்கியம்!- கௌசல்யா உருக்கம்!

என் தம்பி என்கூடப் பேச முயற்சி பண்றான். ஆனா, அவன் எந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டாலும் நான் உடனே ப்ளாக் பண்ணிடுவேன்.


இவ்ளோ நடந்த பிறகு, எங்க பாட்டி என்னைப் பார்க்க ரெண்டு தடவை இங்கே வீட்டுக்கு வந்தாங்க. அவங்க எல்லாம் சேர்ந்து இனியும் என்னைப் பழிவாங்க என்ன‌ சூழ்ச்சிவெச்சிருக்காங்கனு தெரியலை.

அவங்களை நினைச்சா பயமா இருக்கு. இனியும் என்ன நடக்கும்னு தெரியலை.கௌசல்யாவின் கண்களில் இன்னமும் பயம் தெரிகிறது.

சாதிய அவலத்தின் உயிர்சாட்சியாக நிற்கிறார், உடுமலைப்பேட்டை ஆணவப்படுகொலையில் உயிர்பிழைத்த கௌசல்யா.

காதல் கணவர் சங்கர் கொல்லப்பட்ட பிறகு, அவர் வீட்டில்தான் வாழ்கிறார். சமீபத்தில் தன் மாமனாருக்கு அரசு வேலையையும், தனக்கு பென்ஷனையும் போராடிப் பெற்றுள்ளார்.

சங்கர் இல்லாத வாழ்க்கை?

சங்கருக்காகத்தான் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன். சங்கர் என்கூடத்தான் இன்னமும் இருக்கார். சங்கர் கண்ட கனவு எல்லாம், இனி என் கனவுனு நினைச்சு வாழ்றேன்.

அவருடைய அப்பாவை நல்லா பார்த்துக்கணும், தம்பிகளை நல்லா படிக்கவைக்கணும். அவங்க அம்மாவுக்கு ஒரு வீடு கட்டணும்னு ஆசை. இதை சங்கர் இடத்துல இருந்து நான் நிறைவேற்றுவேன். அதுதான் என் ஆசை.

இதைத் தாண்டி எனக்கும் சங்கருக்கும் பல கனவுகள் இருந்தன. அதை எல்லாம் இந்தச் சாதி பறிச்சிடுச்சு. எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. இங்கே சாதி ஒழியணும், அதுதான் முக்கியம்.

உங்கள் காதல் எப்போ வீட்டுக்குத் தெரிய வந்தது?

நான் காலேஜ் படிச்சுட்டே தனியாக‌ ஜப்பான் மொழியும் படிச்சேன். ஒருநாள் அந்த க்ளாஸ் முடிய லேட் ஆகிடுச்சு. இரவு 7:30 மணி இருக்கும். எனக்காகக் காத்திருந்த சங்கர், பொள்ளாச்சியில் இருந்து பழநி வரைக்கும் என்னோடு பஸ்ல வந்தார்.

அதைக் கவனித்த அந்தப் பேருந்து கண்டக்டர், என் அம்மாகிட்ட `உங்க பொண்ணு கூட யாரோ ஒரு பையன் பேசுறான்'னு சொல்லிட்டார்.

அம்மா என்கிட்ட கேட்ட முதல் கேள்வியே `அவன் என்ன சாதி?' என்பதுதான். `அவன்கூட இனி பழகக் கூடாது. நம்ம சொந்தக்காரங்களுக்குத் தெரிஞ்சா, நம்ம குடும்பத்தைக் கேவலமா பேசுவாங்க'னு திட்டினாங்க.

சங்கர் ஃபைனல் இயர் காலேஜ் முடிக்க ஒன்பது மாசம் இருந்தது. `படிப்பு முடிச்சாத்தான் வேலைக்குப் போக முடியும். நீ படிச்சு முடிக்கிற வரை நான் வேலைக்குப் போறேன்'னு சொன்னேன். ஆனா, அவருக்கு அதுல இஷ்டம் இல்லை. நான் சொல்லி புரியவெச்சேன்.


எங்க வீட்டுல ரொம்பக் கெடுபிடி காட்டினதும், சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி போன ஜூலை மாசம் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டைவிட்டு வந்துட்டேன். அப்பதான் இந்த விஷயம் எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சது.

அப்போதே உங்கள் குடும்பத்தில் இருந்து மிரட்டல் வந்ததா?

பழநி காவல் நிலையத்தில் சங்கர் என்னைக் கடத்திட்டதா, என் அப்பா கொடுத்த புகாருக்காக நீதிமன்றம் போனோம்.

என் குடும்பத்துல இருந்த எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொண்டு `இழிசாதிப் பய கட்டின தாலியை கழுத்தில் கட்டியிருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா? மரியாதையா எங்கக்கூட வந்துடு. இல்லைன்னா, உன்னைக் கொன்னுடுவோம்'னு திட்டினாங்க.

அங்கேயே அடிச்சாங்க. நீதிமன்றத்துல `என் கணவரோடு செல்லத்தான் எனக்கு விருப்பம்'னு சொன்னேன். நீதிபதியும் `உங்கள் கணவரோடு வாழலாம்'னு தீர்ப்பு சொல்லி புகாரைத் தள்ளுபடி செய்தார்.

ஆளாளுக்கு எங்களை மிரட்டியதில், அப்பவே நானும் சங்கரும் கொஞ்சம் பயந்திருந்தோம்.

உங்கள் தாத்தா உங்களை ஏமாற்றிக் கடத்தியதாகச் சொன்னாங்களே?

ஆமாம். என் தாத்தா ஜெயராமன் என்னைப் பார்க்க வந்தார். `கவலைப்படாதே. அப்பா, அம்மா கோபம் கொஞ்ச நாள்ல போயிடும்'னு சொன்னவர். ஒரு நாள் முழுக்க இருந்தார்.

அடுத்த நாள் கறி எடுத்துட்டு வந்து, `உன் கையால சமைச்சுக் கொடு'னு சொன்னார். சமைச்சுக்கொடுத்ததும் `என் குலசாமி'னு கையைப் பிடிச்சுக் கிட்டார்.

அடுத்த நாள் மறுபடியும் வந்தார். கொஞ்ச நேரத்துல `எனக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனைக்குப் போகலாம்'னு என்னைக் கூப்பிட்டார். நான் வேலை இருக்குனு மறுத்தேன். `தாத்தாவைச் சந்தேகப்படுறியா?'னு கேட்டார். அப்ப சங்கரும் காலேஜ் போயிருந்தார்.

என்னை ஸ்கூட்டியில ஏத்திக்கிட்டு வேற வழியில் வேகமாக ஓட்டினார். ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கார்ல என் அப்பா, அம்மா, அப்போவோட நண்பர்கள் இருந்தாங்க. நான் ஸ்கூட்டியில இருந்து குதிச்சுட்டேன்.

ஆனாலும், என்னை விரட்டிப் பிடிச்சு காரில் ஏத்திக்கிட்டாங்க. அஞ்சு நாள் தொடர்ந்து திண்டுக்கல், திருப்பூர்னு வேற வேற ஊர்ல இருக்கும் மந்திரவாதிகள், சாமியார்களிடம் கூட்டிப்போய், என்னை சங்கர்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைச்சாங்க.

அதுக்குள்ள போலீஸ்கிட்ட, என்னைக் கடத்திட்டாங்கனு புகார் கொடுக்க சங்கர் முயற்சி செஞ்சிருக்கார். அந்த ஸ்டேஷன் இந்த ஸ்டேஷன்னு மாறி மாறி அலையவிட்டு, ரெண்டு நாளைக்கு அப்புறம்தான் கம்ப்ளைன்ட்டையே வாங்கியிருக்காங்க.

அதுக்குள்ள மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு காவலர், என் அப்பாகிட்ட பேசினார். அவர் `அந்த சங்கர் பையன் இனி பேசாம இருக்கணும்னா, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். எடுத்துக்கிட்டு வாங்க'னு சொன்னார்.

அதுக்குள்ள வக்கீல்களை எல்லாம் கூட்டிட்டு வந்து என்கூட‌ப் பேசவெச்சாங்க. நான் உறுதியா இருந்தேன். `தயவுசெய்து என்னை சங்கரோடு வாழவிடுங்க'னு கெஞ்சினேன்... அழுதேன்.

என் அப்பாவும் அம்மாவும் `உனக்கு விஷம் குடுக்கிறோம். குடிச்சுட்டு மரியாதையா செத்துப்போ'னு மிரட்டினாங்க‌. நான் அமைதியா இருந்தேன்.

அப்புறம் அப்பா, `நீ அந்தக் கீழ்சாதி நாயோடு வாழ்ந்து எப்படியாவது செத்துப்போ. நாங்க உன்னைத் தலைமுழுகிட்டோம்'னு சொன்னார்.

அப்படித்தான் மீண்டும் சங்கர் கூடச் சேர்ந்தேன். தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன.சங்கர் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்ததால் எங்களால் ஊரைவிட்டு எங்கேயும் போக முடியலை.

கொஞ்ச நாட்கள்லயே மறுபடியும் அப்பா, அம்மா, பாட்டி, உறவினர்கள்னு சிலர் வீட்டுக்கு வந்து மிரட்டினாங்க. `பணம் கொடுக்கிறேன்'னு சங்கர்கிட்ட பேரம் பேசினாங்க. என் அப்பா `உன்னையும் உன் புருஷனையும் கொன்னுடுவோம்'னு மிரட்டினார்.

உங்க குடும்பம் கொலை பண்ணிடுவாங்க'னு சொன்னதும் சங்கர் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா?

அன்னைக்கு நைட் அதைப் பற்றி பேசினார். `உங்க அப்பா நம்மைக் கொன்னுடுவாங்களா பாப்பா?'னு கொஞ்சம் பயத்தோடுதான் கேட்டார்.

நான் அவர் கையைப் பிடிச்சுட்டு `எங்க அப்பாவுக்கு என் மேல பாசம் அதிகம். என் சந்தோஷம்தான் அவருக்கு முக்கியம். அவர் எப்படி என்னையும் உன்னையும் கொலை பண்ணுவாரு?'னு சொன்னேன்.

ஆனா, சங்கர் `ஒருவேளை என்னைக் கொன்னுட்டா. நீ உங்க வீட்டுக்கே போயிடு பாப்பா. இங்கே உனக்கு ஒரு வசதியும் இல்லை. தனியா இருந்து கஷ்டப்படாதே'னு சொன்னார்.

ஆனா, சங்கருக்கு அப்ப‌வே தெரிஞ்சிருக்கு. கொலை பண்ணிடுவாங்கனு. நான்தான் ஏமாந்து போயிட்டேன்'' -அமைதியாகிறார்.

கொலைக்குப் பிறகு உங்கள் குடும்பத்தினர்கூடப் பேசினீங்களா?

கூலிப்படையைவெச்சு மகளையும் மருமகனையும் கொல்லும் குடும்பத்தைக் `குடும்பம்'னு சொல்ல முடியுமா? எனக்கு என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்க விருப்பமே இல்லை.

மகளைவிட சாதி எப்படிப் பெரிசுனு இன்னமும் என்னால புரிஞ்சுக்க முடியலை. `சொந்தக்காரங்க திட்டுவாங்க. சொந்தக்காரங்க முன்னாடி அவமானப் படணும்'னு அடுத்தவங்களைப் பற்றித்தான் அவங்க கவலைப்பட்டாங்க.

என் சந்தோஷம் பற்றி, என் உணர்வுகள் பற்றி அவங்க யோசிக்கவே இல்லை.

எல்லாரும் ஆணவப்படுகொலைகள் பற்றிப் பேசிட்டிருந்தாலும், நீங்கதான் நேரடியா பாதிக்கப்பட்டிருக்கீங்க. பெற்றோர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

உங்க பொண்ணு-பையன்தானே லவ் பண்றாங்க. முடிஞ்சா அவங்களைச் சேர்த்துவைங்க. காதலை ஏத்துக்க முடியலைன்னா தயவுசெய்து அவங்களை விட்டுடுங்க.

அவங்க எங்கேயாவது போய் பிழைச்சுக்கட்டும். சாதியைச் சொல்லி அவங்களைக் கொன்னுடாதீங்க.

நாங்க சாதி மாறி பிறந்தது தவறா, காதலிச்சது தப்பா? ஏன் எங்களைப் பிரிக்கணும்னு நினைச்சு கொலை வரைக்கும் போகணும்? நீங்க தூக்கி வளர்த்த பொண்ணு-பையன் சந்தோஷத்தைவிடவா சாதி முக்கியம்?

எனக்கு 19 வயசுதான் ஆகுது. என் வாழ்க்கையை, என் குடும்பத்தைத் திருப்பித் தர முடியுமா? என் அப்பாவும் ஜெயிலுக்குப் போயிட்டார். என் வாழ்க்கையும் நாசம் ஆகிடுச்சு.

வாழ வேண்டியவங்களை வாழவிடுங்க ப்ளீஸ்!

கெளசல்யாவுக்கு பென்ஷன்!

சங்கர் கொலை செய்தி டி.வி-யில் வந்த உடனே, குமரலிங்கம் கிராமத்துக்குப் போனோம். அப்போதுதான் தண்டோரா போட்டு `நாளைக்கு சங்கர் இறுதிக் காரியத்துக்கு வந்திடுங்க'னு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இது ஒரு கொலை வழக்கு. உடல் வருவதற்கு ரெண்டு நாட்களுக்கு மேல் ஆகும் என்பகூடத் தெரியாமல் இருந்தார்கள். முதலில் அவர்களை அழைத்து எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் பற்றி சொன்னோம்.

இதில் எட்டு கோரிக்கைகளையும் அரசாங்கத்திடம் வைத்தோம். தொடர்ந்து அழுத்தம் கொடுத்துப் போராடியதால் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், நிவாரணம் தர வேண்டும், கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என அந்த எட்டு கோரிக்கைகளும் நிறைவேறியிருக்கின்றன.

அதேபோல கெளசல்யாவுக்கு சட்ட உதவிகள், உளவியல் சார்ந்த சிகிச்சைகள் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறோம்.

இப்போது அவர்களின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கும் போதுதான் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என்கிறார் எவிடன்ஸ் அமைப்பின் கதிர்!


No comments:

Post a Comment