July 26, 2016

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகலுக்கு யார் காரணம்?

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விடயங்கள் காணப்படுகின்றன்.கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில் மாறும் இயல்பைக் கொண்டுள்ளனவா?


அல்லது மேலும் கடினமாகும் போக்கினைக் கொண்டுள்ளதா? என்பவற்றினை ஆராய்வதற்கு இவ் விபரங்கள் அவசியமாகின்றன.

அது மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் அரசியல் தலைமைகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும், கிழக்கு மக்கள் மனதில் காணப்படும் நியாயமான சந்தேகங்கள் என்ன? என்பதை அறிவதற்கு இவை அவசியமாகின்றன.

ஒருவேளை இத் தகவல்கள் ஏற்கெனவே அறிந்தவையாக இருப்பினும் வெளிநாட்டவரால் அவை எவ்வாறு நோக்கப்படுகின்றன? என்பதை அறிவது தேவையாகிறது.

கருணாவின் விலகல் தொடர்பாக அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் டி பி எஸ். ஜெயராஜ், தராக்கி போன்றோர் பெரும் விளைவுகள் ஏற்படலாமென அச்சத்தினை வெளியிட்டிருந்தனர்.

பின்னணியில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகள் வெளியாகின. 19990களின் பிற் பகுதியில் இடம்பெற்ற ஆனையிறவு முகாம் தாக்குதலில் கருணாவின் பங்கு அளப்பரியது.

இதனால் தலைவரின் நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். இதன் காரணமாக கிழக்கு மாகாணக் கட்டுப்பாடு ஓரளவு முழுமையாகவே அவரிடம் வழங்கப்பட்டது.

2002ஆம் ஆண்டு போர் நிறுத்தம் புதிய நிலமைகளைத் தோற்றுவித்திருந்தது. ஏனெனில் தற்போது கிழக்கு மாகாணத்தில் அரசியல் வேலைகளைத் தீவிரப்படுத்த புலிகளின் தலைமை தீர்மானித்ததால் வட மாகாணத்திலிருந்து உத்தரவுகள் கிழக்கை நோக்கிச் சென்றன.

இவ் உத்தரவுகள் தனது அதிகாரத்தை மட்டுப்படுத்தும் முயற்சியாகவே கருணா கருதினார். கிழக்கு ராணுவத்திற்கான உத்தரவுகள் வடக்கிலிருந்து நேரடியாகவே சென்றன.

கூடவே புலிகளின் பொலீஸ், நீதிமன்றம், வரி வசூலித்தல் போன்றன புலிகளின் உளவுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு மாகாணத் தலைமை செயலிழந்த ஒன்றாக படிப்படியாக மாற்றப்பட்டது. இதன் விளைவாக யாழ். ஆதிக்கம் தம்மை இரண்டாம் தரத்தில் வைத்திருக்க முனைகிறது என்ற எண்ணம் ஆழமாக பதியத் தொடங்கியது.

இதன் காரணமாக கிழக்கு மாகாணம் உளவுத்துறையினரின் வேட்டைக்காடாக மாறியது. மாறி மாறி உளவு பார்க்கப்பட்டது.1987இல் கருணா, பொட்டு ஆகியோர் கிழக்கில் செயற்பட்டபோது அவர்களிடையே பெரும் அதிகாரப் போட்டி காணப்பட்டது.




வர்த்தகர்கள் தமது வரிகளை யாரிடம் ஒப்படைப்பது? என்ற வாதங்கள் ஏற்பட்டபோது ஒத்துழைக்க வேண்டாம் என கருணா கூறியுள்ளார்.

ஆனால் கருணாவும் தானே சில வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். இவ் விபரங்கள் யாவும் புலிகளின் வடக்குத் தலைமையின் கையில் கிடைத்தன.

வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பது, வரிப்பணத்தில் கையாடல், முஸ்லீம் மக்களுக்கு எதிரான குழப்பங்கள் என குற்றங்கள் வைக்கப்பட்டு வன்னிக்கு வந்து பதில் கூறுமாறு கேட்கப்பட்டது.

வன்னிக்கு செல்வதானால் அதுவே தனது இறுதி யாத்திரை எனக் கருதிய கருணா அங்கு செல்லவில்லை.

இதனால் ஐரோப்பாவிற்கு தமிழ்ச்செல்வனுடன் செல்ல வேண்டிய அவர் நிறுத்தப்பட்டார். தேர்தல் நடவடிக்கைகளும் தீவிரமாகியிருந்த நிலையில் நிலமைகள் மாற்றமடையத் தொடங்கின.

கருணாவைக் கடத்த பொட்டு தலைமையில் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் கசிந்தன. கருணா தனது நிலமை குறித்து கவலைப்பட ஆரம்பித்தார்.

சிக்கலான பின்னணியை உணர்ந்துகொண்ட எரிக் சோல்கெய்ம் நேரில் நிலமைகளைக் கண்ணடறிவதற்காக இலங்கை வந்தார். பிரதமர், ஜனாதிபதி என்போரைச் சந்தித்த பின்னர் தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் சந்தித்தார்.

கருணா தனித்தே செயற்படுவதாகவும், அங்குள்ள பெரும்பான்மையினர் அவருக்கு ஆதரவாக இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் கருணாவின் பிரச்சனை உட்பிரச்சனை எனவும், தம்மால் அதனைக் கையாண்டு தீர்க்க முடியும் எனவும், யாரும் அதில் தலையிடத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இப் பிரச்சனை குறித்து சோல்கெய்ம் இனது அபிப்பிராயம் பின்வருமாறு இருந்தது. பிரபாகரனுக்கு மிக நம்பிக்கையான ஒருவராக கருணா இருந்தார்.

இப்பிளவுச் செய்தி தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும், அவரிடம் கவர்ச்சித் தன்மை காணப்பட்டதாகவும், மகிழ்ச்சியான மனிதர் எனவும், மேற்குலக நாட்டவர்க்கு ஏனையோரை விட அவரது கவர்ச்சி பிடித்திருக்கிறது.

இப்பிளவு பெண், பணம் போன்ற காரணங்களால் ஏற்பட்டதே தவிர அரசியல் காரணங்கள் அல்ல என பாலசிங்கம் தெரிவித்த அதேவேளை கிழக்கில் குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தலைவர் புனிதமாக இருப்பதை அதாவது மது, மாது போன்ற விடயங்களில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் இது எவ்வாறு மாறப்போகிறது? என்பது கவனிக்க வேண்டியது.

இயக்கத்தின் பணத்தைக் கையாடுவது, தனது குடும்பத்தை மலேசியாவிற்கு அனுப்பிய பின் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பது போன்றன கருணா குண இயல்பில் ஒரு சிதைந்த மனிதராகவே காணப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

இலங்கை அரசு இப்பிளவு விடயத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர். இப் பிரச்சனைகளை அவதானித்து வந்த கொழும்பிலுள்ள சிலர் போர்நிறுத்தம் கருணாவின் பிளவிற்கான புறச் சூழலை வழங்கியதாகவும் கருதினர்.

மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளோடு இயங்கும் அமைப்புகளுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் மிகவும் சிக்கலாக அமைவது சாதகமே என்றனர்.

இச் சந்தர்ப்பத்தில் கருணாவின் பேச்சாளரான ஆரன் தரின்( Aaron Darrin) என்பவரின் கருத்துப்படி இப்பிளவு ஏற்படும் என்பதில் தமக்கு சந்தேகங்கள் இருக்கவில்லை எனவும், சில முக்கியமான அலுவல்களை அவர் செய்யத் தொடங்கியிருந்தார்.

உதாரணமாக கிழக்கின் படைப் பிரிவுகளுக்கென தனித் தனியான கொடிகள் தயாரித்திருந்தார். இஇவை குறித்து புலிகளின் தலைமைக்கு சந்தேகங்கள் எழுந்திருக்கலாம்.

ஒருமுறை தானும் கருணாவும் தலைவரை சந்தித்தபோது கிழக்கிற்கென கொடிகள் வைத்திருப்பது நல்லதுதான் ஆனால் புலிகளின் இலச்சினை முகப்பில் இருத்தல் அவசியம் என்றார்.

நிதிதான் முக்கிய அம்சமாக காணப்பட்டது. பண விடயங்கள் தொடர்பான விபரங்களை பரிசோதனை செய்வதற்கென சிலர் அவ்வப்போது அனுப்பப்பட்டிருந்தனர்.தன்னைச் சந்தேகப்பபடுவதை கருணாவால் ஏற்க முடியவில்லை. இதன் காரணம் என்ன?

கிழக்கு எதிர் வடக்கு என்ற பிரச்சனை இருப்பதாக தான் கருதவில்லை எனக் கூறும் அவர், பிளவின்போது மட்டும் இப்பிரச்சனையை கருணா முன்வைப்பதன் காரணம் என்ன? என வினவக்கூடும்.மிக நீண்ட காலமாக புலி அமைப்பில் முக்கிய பங்கினை வகித்த அவர் அவ்வாறு கருத வாய்ப்பு இல்லை. கருணாவே பிரிந்து சென்றார்.

ஏனைய முக்கியஸ்தர்கள் பிரியவில்லை. இதன் அர்த்தம் அவர்கள் புலிகள் அமைப்பினை நன்கு விரும்பியே இணைந்திருப்பதாக எண்ணக்கூடாது.
கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 5000 போராளிகள் இப்பிளவிற்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

வன்னியின் அழைப்பிற்கிணங்க அங்கு செல்ல கருணா மறுத்தமைக்குக் காரணம் தனக்கு எதுவும் நடக்கலாம் என்ற சந்தேகமே.இவற்றிற்குக் காரணம் புலிகளுக்கும் நோர்வேயிற்கும் இடையே ஏற்பட்டிருந்த விரும்பத்தகாத உறவே என்கிறார்.

ஏனெனில் கருணாவா அல்லது நாமா என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள் என அவர்கள் கூறியிருக்கக்கூடும் என்கிறார் தரின்.

பத்திரிகையாளரான சிமாலி சேனநாயக்கா தெரிவிக்கையில் தாம் புலிகளுக்கு கருணாவின் விலகல் பற்றித் தெரிவித்த போது அவர்கள் தன்னை நம்பவில்லை என்கிறார்.

தன்னை தமிழ்ச் செல்வனின் காரியாலயத்திற்கு வரும்படி அழைத்தபோது அங்கு தமிழ்ச்செல்வனுக்கு அருகில் கருணாவிலிருந்து விலகிய இருவர் அவர் அருகில் இருந்ததாகவும், அதன் பின்னர் தான் அவர்களைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தாம் பலமான ஆயுதங்களுடன் இருப்பதாக தெரிவிக்கும் செய்தியை எடுத்துச் செல்லும் வகையில் அவர்களின் நடத்தை காணப்பட்டதாகவும், ஒரு தனி மனிதனின் விலகலே அது என்பதை அவர்கள் உணர்த்த முயன்றதாகவும் தெரிவிக்கிறார்.

கருணாவின் விலகலை இன்னொரு கோணத்தில் தெரிவிக்கும் அப் பத்திரிகையாளர் இளைஞனான அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக செல்கிறார்.

பிரிந்தபின் எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்? எனக் கேட்டபோது தான் வெளிநாடுகளில் ஓர் வலைப் பின்னலை ஏற்படுத்தியிருப்பதாகவும், சமாதானப் பேச்சவார்த்தைகளுக்காக சென்ற வேளையில் தனக்கு நேரடியாக பணத்தை அனுப்புமாறு கேட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இச்செய்தி தலைவரின் செவியில் எட்டியிருக்கும் என எண்ணியிருந்தேன். கருணா பணத்தைக் கையாடியதாக அப்போது குற்றச்சாட்டுகள் வந்தபோதும் அவை எவ்வளவு தூரம் உண்மை என்பது சந்தேகமே என்கிறார்.

கருணாவைத் தாம் செவ்வி கண்டபோது பிரதான போர் நிகழ்வின் போது கிழக்குப் போராளிகளே முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார்கள் எனவும், இது நிறுத்தப்பட வேண்டும் எனவும், தான் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அம் முயற்சிகளுக்கு மிகுந்த பாராட்டு வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவை அவரது மனப் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை வெளிப்படுத்தின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் மிக முக்கிய பங்கை வகித்ததே அவரது மாற்றத்திற்கான காரணமாக கொள்ள முடியும் என்கிறார் அப் பத்திரிகையாளர்.

போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் செயற்பட்ட சுசனா ரிங்கார்ட் பெடர்சன் ( Susanne Ringgaard Pedersen) இப் பிரச்சனை குறித்து தெரிவிக்கையில் கருணா இன் விலகல் என்பது தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக கூறுகிறார்.

இப் பிரச்சனையை நோர்வே தரப்பினர் சரியாக கவனத்தில் எடுக்கவில்லை. வெருகல் ஆற்றங்கரைப் பகுதியில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இத் தருணத்தில் கண்காணிப்புக் குழுத் தலைவர் இலங்கை அரசாங்கத்திடம் சென்று இந் நிலமைகளை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடாது.

அது சமாதான முயற்சிகளுக்குப் பெரும் பாதிப்பைத் தரும் என எச்சரித்திருந்தனர். அரசாங்கம் இவ் உறுதி மொழியை காப்பாற்றியதாக நோர்வே வெளியில் கூறிய போதிலும் அது அவ்வாறு இல்லை. நான் அவற்றை நேரில் கண்டேன்.

அரச தரப்பினர் இதற்கு முன்னதாக கருணாவைச் சந்தித்தார்களா? என்பது சந்தேகமாக இருந்த போதிலும் மட்டக்களப்பு பகுதியில் அடுத்த 6 மாதங்களில் தான் நேரில் கண்ட கருணா தரப்பினர் மேற்கொண்ட புலிகளுக்கு எதிரான படுகொலைகள் அரச தரப்பின் உதவியில்லாமல் நடந்திருக்க முடியாது.

அரச ராணுவ முகாமிற்கு அருகில் அவர்களது முகாம் காணப்பட்டது. எனது விலகலுக்குப் பின்னர் அப் பதவியை ஏற்ற டென்மார்க் பொலீஸ் அதிகாரி அதற்கான இச் சாட்சியங்களைக் கண்டு பிடித்தார்.

இவற்றை கொழும்பிற்கு எடுத்துச் சென்று கையளித்திருந்தார். அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனெனில் அதனை அவர்கள் அலட்சியப்படுத்தினர்.

இது முடிவுக்கான ஆரம்பம் என அவர் தெரிவித்தார். நோர்வேயினரும், அமெரிக்கர்களும் இதனைத் தமது கவனத்தில் எடுக்கவில்லை எனில் அதுவே முடிவின் ஆரம்பம் என்றார்.

ஏனெனில் விடுதலைப்புலிகள் அரசை ஒருபோதும் நம்பியதில்லை. எனவே அவர்கள் போரை நோக்கி திரும்புவது தவிர்க்க முடியாதது என்றார்.

கருணாவின் விலகல் குறித்து அரசு நடந்து கொண்ட முறை சமாதானத்தில் அரசிற்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாக்கியது.

கருணாவைப் பற்றித் தெரிவிக்கையில் பணம் பண்ணுவது, நன்கு வாழ்க்கையை அனுபவிப்பது, பிள்ளைகளை வெளி நாடு அனுப்பி விலை உயர்ந்த சுகபோகத்தை அனுபவிப்பது என்பவைகளாக இருந்தன.

ஆனால் அவரது கழுத்து இறுகிய வேளையில்தான் பலநூறு சிறுவர்களை இரண்டு மாதத்திற்குள் இணைத்து பயிற்சிகள் வழங்கி ஆயுதங்கள் வழங்கி தயாராக இருந்தார்.

அதன் பின்னரே அவர் விலகினார். இவை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்கிறார் சுசன்.

ஒரு புறத்தில் கருணா பிளவால் ஏற்பட்ட பதட்ட நிலை. மறு புறத்தில் தேர்தல் சூடு பிடித்த நிலை, இன்னொரு புறத்தில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

புலிகளின் நிலைப்பாடு எவ்வாறு அமையலாம்? என்ற எதிர்பார்ப்பு என்பன ஓர் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment