July 16, 2016

வலி.வடக்கில் பலப்படுத்தப்படும் இராணுவ முகாம்கள்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள முகாம்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

 
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை சிரமதானம் செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே முகாம்களுக்கு முன்னால் உள்ள வீதிகளில் நெருக்கமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்படுவதால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அச்சத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர்பாதுகாப்பு வலய எல்லைகளில் உள்ள பொது மக்களின் வீடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ள போதிலும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலய வேலிகளை சீமெந்து தூண்கள் கொண்டு நிரந்தரமாக்கும் நடவடிக்கை குரும்பசிட்டிப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுவிக்கப்பட்ட வல்லை – அராலி வீதியில் உள்ள 600 மீற்றர் தூரத்தில் 20 மீற்றர் துரத்திற்கு ஒரு வேகத்தடைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




No comments:

Post a Comment