July 17, 2016

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் உயர்நீதிமன்றில் புதிய மனு தாக்கல்!

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் உயர்நீதிமன்றில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, நாளை திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் தரப்பில் உயர்நீதிமன்றில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி புதிதாக இடைக்கால மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த மார்ச் 2ம் திகதி கைதிகளின் விடுதலைக்கு அனுமதி மற்றும் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

2014ம் ஆண்டு டிசம்பர் 18ம் திகதி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய முன்னைய கடிதத்தின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை, கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தினால் முடிவுக்கு வருகிறது.

எனவே, தமிழக அரசின் மேற்கண்ட கடிதத்தை (மார்ச் 2ம் திகதி எழுதிய கடிதம்) கூடுதல் ஆவணமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு ராமசுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம், இந்த விசாரணைக்கு காரணமான முன்னைய கடிதத்தின் மீதான விவாதத்தை முடித்து வைத்துள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் புதிதாக ஏதும் முடிவெடுக்கத் தேவையில்லை.

ஏனென்றால், கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி உயர்நீதிமன்றின் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இரண்டாவது கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறது.

அதனால் தற்போது நிலுவையில் இருக்கும் விசாரணையின் அவசியம் தேவை இல்லாமல் போய்விடுகிறது.

அதனால் இந்த வழக்கில் தற்போது புதிதாக முடிவெடுக்க எதுவும் இல்லை.

எனவே தமிழக அரசின் இரண்டாவது கடிதத்தை கருத்தில் கொண்டு கோர்ட்டு முடிவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு வழக்கறிஞர் பிரபு ராமசுப்பிரமணியன் கூறினார்.

No comments:

Post a Comment