May 25, 2016

முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்ப ஆரம்பம் !

களனி கங்கை நீர் மட்டம் 4 அடிகளாக குறைந்தது களனி கங்கையின் நீர் மட்டம் 4 அடிகளாகக் குறைந்திருப்பதுடன்,
கொலன்னாவ மற்றும் கடுவலை பிரதேச செயலகப் பிரிவுகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியத்தொட ங்கியுள்ளது.

முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளதுடன், வீடுகளை சுத்தப்படுத்தும் உதவிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளநீர் வடிந்திருப்பதால் கொலன்னாவ மற்றும் கடுவலை பகுதிகளில் இயங்கிவரும் 36 முகாம்களில் உள்ள மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருவதாகவும், கடுவலையில் உள்ள முகாம்களை இன்றைய (24) தினம் மூட முடியும் என்றும் மேல்மாகாண வெள்ள அனர்த்த நிலைமைகளை ஒன்றிணைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று(23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேல்மாகாண வெள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் விளக்கமளித்தார்.

கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் 36 கிராமசேவகர் பிரிவுகளில் 29 முகாம்கள் நடத்தப்படுகின்றன. இப்பகுதியில் 25 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 91 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்பொழுது 51 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

கடுவெலை பிரதேச செயலகப் பிரிவில் 7 முகாம்களில் 560 குடும்பங்களைச் சேர்ந்த 1120 தங்கியுள்ளனர். இதனைவிட உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் 2500ற்கும் அதிகமானவர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சமைத்த உணவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதுடன், உலருணவுப் பொருட்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு ஐந்து நாட்களுக்குத் தேவையான உலருணவுப் பொருட்கள் வழங்கப்படவிருப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வீடுகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளுக்காக 650 சிவில் பாதுகாப்புப் படையினர் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு மேலதிக மின்சாரம் வழங்கப்படுவதுடன், வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

படிப்படியாகக் குறையும் களனி கங்ககை நீர் மட்டம்

7.65 அடியாகக் காணப்பட்ட கங்கையின் நீர்மட்டம் 4 அடியாகக் குறைந்துள்ளது என நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஆர்.என்.டபிள்யூ ரத்நாயக்க தெரிவித்தார்.

களனி கங்கை ஆரம்பிக்கும் பகுதிகளில் மழைபெய்தாலும் களனி கங்கையின் நீர்மட்டத்துக்கு அவை அச்சுறுத்தலாக அமையாது என்றும் கூறினார். களனி கங்கையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியதால் வெள்ளமட்டம் குறைந்து வருகிறது.

எனினும் வடிந்தோடக்கூடிய வசதியில்லாமல் நீர் தேங்கியிருந்தால் அவற்றை பம்பிகள் மூலம் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீரை வெளியேற்ற நடவடிக்கை

அதேநேரம், வெள்ளம் வடியாத பகுதிகளில் அவற்றை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பி.டபிள்யூ.ஆர்.பாலசூரிய தெரிவித்தார்.

தம்மிடமிருக்கும் இயந்திரங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள இயந்திரங்களைக் கொண்டு இவற்றை வெளியேற்றவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தரமானதாகவே வழங்கப்படுவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment