July 17, 2016

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்ற ஆய்வு!

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான பொருத்தப்பாடுகள் குறித்து இந்தியா சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.


சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி விமான நிலையம், தற்போது இராணுவ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

பலாலி விமான நிலையத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றி, இந்தியாவின் விமான நிலைய அதிகாரசபை சாத்திய ஆய்வை மேற்கொண்டிருப்பதாக, சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்தார்.

பிராந்திய விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றிய ஆராய, இந்திய விமான நிலைய அதிகாரசபையின் குழுவொன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா வந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலாலி விமான நிலையத்தின் 2300 மீற்றர் ஓடுபாதையின் 1000 மீற்றர் பகுதியை மீளப் புனரமைப்பதற்கு, இந்தியா ஏற்கனவே நிதி உதவி வழங்கியிருந்தது.

மகிந்த ராஜபக்ச அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, 2010ஆம் ஆண்டு இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய விமான நிலைய அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சாத்திய ஆய்வின் அறிக்கை, விரைவில் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.

பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டால், அது, விமான நிலைய அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டு, விமான நிலைய சேவைகள் நிறுவனத்தினால் அது செயற்படுத்தப்படும் என்று நிமலசிறி தெரிவித்தார்.

No comments:

Post a Comment