இறுதிக்கட்ட போர் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட தமக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு திருகோணமலை சம்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நேற்றைய தினம் மூதூரிற்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் சம்பூர் மக்கள் கையளித்துள்ளனர்.
போர் காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இடம்பெயர்ந்த தாம் நல்லாட்சி அரசாங்கத்தினால் தமது சொந்த இடங்களில் இரண்டு கட்டங்களாக மீள்குடியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக சம்பூர் கிராமத்திற்கு மீளக்குடியேறிய 365 குடும்பங்களுக்கு அரச மானியக் கொடுப்பனவுத் தொகையும், அரைநிரந்தர வீடுகளும், குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினாலும் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இரண்டாம் கட்டமாக மீள்குடியேறிய 575 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லையென அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 10 வருட காலமாக அகதி முகாம்களில் நரக வாழ்க்கை வாழ்ந்தது போல, சம்பூரில் தமது சொந்த நிலத்திலும் அகதிகளாகவே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும், ஐ.நாவின் பரிந்துரைக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைமாறு கால நீதி தொடர்பான வேலைத்திட்டங்களில் இழப்பீடு வழங்கல் எனும் பொறிமுறைக்கு அமைவாகவும், சம்பூர் பிரதேசத்தினை ஓர் ‘ மாதிரிக் கிராமமாக’ உருவாக்குவேன் என்ற வாக்கிற்கு இணங்கவும், ‘இழந்தவற்றை மீள வழங்கல் அல்லது சீரமைத்தல்’ பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் சம்பூர் மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு முழுச் சொத்துடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் (அரச உத்தியோகத்தர்கள் என வேறுபாடின்றி) அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல்( குறிப்பாக வீடு, குடிநீர், மலசல கூடம் மற்று வாழ்வாதாரம்)
2006 ஆண்டிற்கு பின்னர் திருமணமான குடும்பங்களுக்கும்(புதிய குடும்பங்கள் என்ற வேறுபாடின்றி) மேற்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல்.
குறிப்பாக 02ம் கட்டமாக மீளக்குடியேறிய அனைத்து குடும்பங்களுக்கும் மழை காலம் தொடங்குவதற்கு முன்னர்( செப்ரெம்பருக்கு முன்னர்) அரை நிரந்தர வீடுகளை உடன் வழங்கல்.
இல 2 இல் குறிப்பிடப்பட்ட குடும்பங்களுக்கான குடியிருப்புக்காணி மற்றும் தோட்டக்காணிகளை வழங்கல்
யுத்த காலத்தில் மரணித்தவர்கள்,காயப்பட்டவர்கள் ஆகியோருக்கு இழப்பீடுகளை வழங்கல்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மையினை உரிய நீதிப்பொறிமுறையூடாக வகை கூறல்.
2006 முன்னர் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆவணங்களை வழங்கல்.
புதிய விண்ணப்பதாரிகளுக்கான காணி நடமாடும் சேவையினை நடாத்தி அனுமதிப்பத்திரங்களை வழங்கல்.
2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற குறிப்பிட்டளவு அரச உத்தியோகத்தர்கள் தாங்கள் இடம்பெயர்ந்து சென்ற இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்ற்றி வருகின்றார். இவ் அரச ஊழியர்களின் குடும்பங்கள் சம்பூர் கிராமத்திற்கு மீளக் குடியேறியுள்ளனர். இவ் அரச ஊழியர்கள் தாமாகவே விரும்பும் பட்சத்தில் உடன் இடமாற்றத்தினை வழங்க சிபார்சு செய்தல்.
560 குடும்பங்களுக்கு 01 மாத காலத்திற்குள் அரை நிரந்தர வீடுகளையும், நிரந்தர வீடுகளையும் அமைத்தல்
புதியதாக சம்பூர் கடற்படையினர் தங்களின் தேவைகளுக்கென கோரும் 32 காணிகளை விடுவித்து மக்கள் வாழவும், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தலும், குறிப்பாக சம்பூர் நீலக்கேணி சிறி முருகள் ஆலயத்தை வழிபாட்டுக்காக மக்களிடம் ஒப்படைத்தல்.
46 குளங்கள் புனருத்தாரணம் செய்தல்.
02ம் கட்டமாக குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளக வீதிகளை செப்பனிடல்.
சம்பூர் பிரதேசத்தில் அமைக்க தீர்மானித்துள்ள அனல் மின் நிலையத்திற்கான வேலைத்திட்டங்களை முழுமையாக நிறுத்துதலும், குறிப்பிட்ட 505 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் மக்களை இயல்பான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கல்.
சம்பூரில் அமைந்துள்ள 02 மயானங்களையும் துப்பரவு செய்வதுடன், பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் கொடுத்தலும், மரணச் சடங்குளை மேற்கொள்வதற்கான 02 கட்டடங்களை அமைத்துக் கொடுத்தலும்.
தி/மூ/சம்பூர் மகாவித்தியாலயத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தலும், தேவையான கட்டுமானங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கல்.
அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களால் முன்னெடுத்துவரும் உட்கட்டுமான வேலைத்திட்டங்களை மழை காலத்திற்கு முன்னர் நிறைவு பெறுவதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு சம்பூர் மக்கள் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்படி சம்பூர் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கம், சம்பூர் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம், சம்பூர் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், சம்பூர் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம். சம்பூர் விநாயகர் சனசமூக நிலையம். சம்பூர் சிவில் அமைப்பு,சம்பூர் மீனவர் சங்கம். ஆகியன இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளன.
No comments:
Post a Comment