July 26, 2016

மருத்துவ சிகிச்சையா? - பேரறிவாளனை வதைக்கும் சிறை அதிகாரிகள்!

தமிழக சிறைத்துறை அதிகாரிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார் பேரறிவாளன். 'முன்பைவிட உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கு அதிகாரிகள் சிலர் தடையாக இருக்கின்றனர் என வேதனைப்படுகிறார் அவர்.


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலைக்காக, அண்மையில் பிரமாண்ட பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று வேலூர் சிறையில் தன்னை சந்தித்த வழக்கறிஞர்களிடம் பேசிய பேரறிவாளன்,

மனஅழுத்தத்தைத் தரும் வகையில் சிறைத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் நடந்து கொள்கிறார்.

இரத்தக் கொதிப்பு, சிறுநீரக பிரச்சினை போன்றவற்றுக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தேன்.

மருத்துவர்களும், ஆறு மாதத்திற்கான மருந்துகளை எனக்கு வழங்கினர். அந்த மருந்துகளைச் சாப்பிட்ட பின்னர், முன்பைவிட வலி அதிகமாகிவிட்டது.

வலது கையிலும், இடது கையிலும் வலி உயிர் போகிறது. மூட்டு நோய், முடக்கு வாதம், கண் பார்வை குறைவு என உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளும் தீர்ந்துவிட்டன. மீண்டும் சென்னை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தேன்.

கடந்த 30.6.16 அன்று, 'புழல் சிறையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்' என சிறை மருத்துவர் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார்.

வேலூர் சிறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

ஆனால், சிறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், அப்படியெல்லாம் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

இதனால் ஒரு மாதமாக சென்னை அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறேன்.

கடந்த மூன்று வாரமாக வலி தீர்வதற்காக ஆன்டி-பயாடிக் மருந்துகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்கிறேன். இதன் விளைவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

தமிழக அரசு எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது. ஆனால், சிறைத்துறையில் உள்ள சில அதிகாரிகளால், மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என வேதனைப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார்,

மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பாமல், மனரீதியாக கொடுமைப்படுத்தும் வேலைகளை சிறைத்துறையின் குறிப்பிட்ட அதிகாரி ஒருவர் செய்து வருகிறார்.

தொடர்ந்து எடுக்கப்படும் ஆன்டி-பயாடிக் மருந்துகளால் நிலைமை விபரீதமாகிக் கொண்டு போகிறது.

இந்த விவகாரத்தில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், புழல் சிறைக்கு அவரை மாற்ற வேண்டும் என்றார் ஆதங்கத்தோடு.

No comments:

Post a Comment