July 30, 2016

ரதுபஸ்வெல பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு நல்லாட்சியிலும் பொலிசார் தடை!

வெலிவேரிய, ரதுபஸ்வெல பிரதேச பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிசார் தடையாக செயற்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது கம்பஹா மாவட்டம், வெலிவேரிய அருகேயுள்ள ரதுபஸ்வெல பொதுமக்கள் தமது பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான தம்மிக பெரேராவின் நிறுவனமொன்று அப்பிரதேசத்தில் வெளிவிடும் இரசாயனக் கழிவுகள் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டிருந்தது.

இதன் காரணமாகவே பொதுமக்கள் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் திகதி சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் தம்மிக்க பெரேராவின் நிறுவனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மஹிந்த அரசாங்கம் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி மூவரைப் படுகொலை செய்திருந்தது.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரதுபஸ்வெல பொதுமக்கள் வருடாந்தம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய தினம் இச்சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வழமைபோன்று ரதுபஸ்வெல பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் நாளைய தினம் கிரிபத்கொடை பிரதேசம் ஊடாக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளதால் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் பொலிசார் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ரதுபஸ்வெல பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய்யான வழக்குகளை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ள போதிலும் பொலிசார் அதனை அலட்சியம் செய்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment