சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி வெட்டிகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (24) கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் கோர்ட்டு அனுமதி கொடுத்தது. கடந்த 13-ந்தேதி மாலை முதல் ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். நேற்று மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது.
சுவாதியிடம் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர்.
அப்போது ராம்குமார் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பேஸ்புக் மூலம் சுவாதி எனக்கு அறிமுகம் ஆனார். அவர்மீது காதல் கொண்டேன். அவரை நேரில் பார்ப்பதற்காக சென்னை வந்தேன். என்னுடைய தோற்றத்தை பார்த்து சுவாதி என்னிடம் இருந்து விலகினார்.
சுவாதியிடம் எனது காதலை தெரிவித்தேன். ஆனால் அவர் எனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக என்னை அவமதிக்கும் வகையில் பேசினார். அசிங்கமாக திட்டினார். என் மனதை நோகடிக்கும் வகையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும், எனது குடும்பத்தையும் தவறாக பேசியதாலும் சுவாதியை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை.
சுவாதியை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரிவாளை எடுத்து வந்தேன். ஆனால் என்னை மோசமாக பேசியதை நினைத்த போது ஆத்திரம் ஏற்பட்டது. அவரது வாயில் வெட்ட நினைத்தேன். ஆனால் அது கொலையில் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சுவாதியின் நண்பர் மாலிக்கிடமும் போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்கள். சுவாதியை பற்றிய நிறைய தகவல்கள் மாலிக்குக்கு தெரிந்துள்ளதால் அவரிடமும் விசாரணை நடந்தது.
ராம்குமார் கூறும் தகவல்களை மாலிக்கிடம் கேட்டு அதுபற்றி சுவாதி ஏதாவது கூறி இருக்கிறாரா என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.
ராம்குமாரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை 4.30 மணியளவில் அவரை மூர்மார்க்கெட் அல்லிகுளம் பகுதியில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் சமர்பித்தனர். வாக்குமூலத்தின் வீடியோ சி.டி.யையும் சமர்பித்தனர்.
பின்னர் ராம்குமாரிடம் நீதிபதி கோபிநாத் சுமார் அரைமணி நேரம் தனியாக விசாரணை நடத்தினார். அதன் பிறகு ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment