July 25, 2016

நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மயிலிட்டி இறங்குதுறைக்கு பதிலீடாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் மீன்பிடி இறங்குதுறைக்கான ஆரம்ப கட்டப் பணிகள் கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையினில் அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்து சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியுள்ளன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “புண்ணிய பூமியில் படகுத் துறையா? ஒரு போதும் வேண்டவே வேண்டாம்!  சைவசமயத்தை மாசுபடுத்த ஒரு போதும் அனுமதியோம். கடற்படையே மக்களின் கருத்தை மதி! மயிலிட்டி பலாலி இராணுவக் குடியிருப்பு..! புனிதப் பிரதேசத்தில் இறங்கு துறை அமைப்பா?”, ” புனித பிரதேசத்தில் இறங்கு துறையா? இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்காதே”, ஐந்தாங் குளம், வலுத் தூண்டல் மக்களின் வாழ்வாதாரத்தினை மழுங்கடிக்காதே! ” உள்ளிட்ட பல்வேறு பதாதைகளையும் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீனஹர்த்தா சிவஸ்ரீ- நகுலேஸ்வரக் குருக்கள் குமாரசாமிக் குருக்கள், கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ந. விக்கினேஸ்வரன், சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயத் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன், சைவமகாசபையின் செயலாளர் ப. நந்தகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் ச. சஜீவன், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ. சுகிர்தன், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களது பூர்வீக கிராமங்களுள் ஒன்றான மயிலிட்டியினில் கடற்படையினரது குடும்பங்களிற்கு தாரை வார்த்துள்ளதுடன் அங்கு மக்களை மீளக்குடியமரவிடாது மாற்றீடாக கீரிமலையினில் வேறு ஒரு இறங்குதுறையை அமைத்து வழங்க கடற்படை முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment