வீட்டில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் 8 வருடங்களாகிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை.
அன்றைய சூழ்நிலை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காலமாக இருந்தது. அதனால் உண்மையை யாரிடமும் கூற முடியவில்லை.
தற்போது கூறுகின்றேன், எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்கள் இராணுவம். தான் உறுதியாக கூறுவதாக தாய் ஒருவர் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணி இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்தாலோசனைக்கான வலய செயலணியின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் ஆறு போர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தார் மன்னாரில் வீட்டில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போன இளைஞன் ஒருவருடைய தாய்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வீட்டில் இருந்த எனது பிள்ளையை யார் கொண்டு சென்றது என்று என்னால் அப்போது கூற முடியாது இருந்தது. தற்போது கூறுகின்றேன், இராணுவமே எனது மகனை அழைத்துச் சென்றார்கள். துணிந்து சொல்ல தற்போது தைரியம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்ற போது எமது கருத்துக்களை வழங்க உரிய நேரம் வழங்கப்படவில்லை.
மாறாக விசாரணைகளை மேற்கொண்டவர்கள் எங்களுடைய கவனத்தை திசை திருப்பும் வகையில் வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு, கோழி தருகின்றோம் என கூறினார்கள்.
இந்த நேரத்தில் எங்களை உரிய பதில் கூற விடவில்லை. இராணுவம் தான் எங்களுடைய பிள்ளைகளை கொண்டு போனது என நாங்கள் கூறியிருக்க முடியும்.
எனது பிள்ளையை இராணுவம் தான் அழைத்துச் சென்றது என்று. இதனை முன்னுரிமைப்படுத்த முடியுமா? என்பது எனது கேள்வியாக இருக்கின்றது.
நஸ்டஈடு என வரும் போது முதலில் முன்னுரிமை கொடுப்பார்கள் படையினரில் காணாமல் போனவர்களுக்கே. எங்களுக்கு அல்ல.
மன்னார் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கொழும்பிலும் தமிழர்கள் இருந்தனர்.
அப்போது பல தமிழர்களையும், இளைஞர்களையும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த போது இராணுவத்தினர் பிடித்தனர்.
இந்த நிலையில் யாருக்கு இந்த நஸ்டஈடு வழங்கப்போகின்றார்கள் என்று தெரியவில்லை.
எல்லாவற்றினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என கூறுகின்ற போது இரகசிய முகாம்கள் பல இருக்கின்றது.
2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் பிடிக்கப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொன்று விட்டு கண்ட இடங்களில் எல்லாம் தூக்கி வீசிப்போட்டு சென்றார்கள்.
அந்த சமயத்தில் எனது மகனாக இருக்குமோ என்ற அச்சத்தில் நாங்களும் சென்று குறித்த சடலங்களை பார்வையிட்டோம்.
ஆனால் எனது மகன் எங்கேயும் சுட்டு போடப்படவில்லை. எனது மகன் எங்கேயே ஒரு இரகசிய தடுப்பு முகாமில் தற்போது வரை உயிரோடு இருக்கின்றான். எனவே காணாமல் போன அனைவரையும் எங்களுக்கு காண்பிக்க வேண்டும்.
அப்படி காணாமல் போன எமது பிள்ளைகளையும், உறவுகளையும் காட்ட முடியாது விட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மையை பகிரங்கமாக கூற வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் சர்வதேச விசாரணை எங்களுக்கு தேவை.
அரசாங்கத்தில் கட்டுப்பாட்டிற்கு உள்ளே இருந்தே எமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கமே எனது கணவனை கடத்தியதாக மேலும் ஒரு பெண் கருத்து தெரிவித்தார்.
இவர்களிடம் கேட்டு கேட்டு நாங்கள் களைத்து போய்விட்டோம்.
எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும். எனவே இலங்கை அரசாங்கத்தினால் எங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர முடியாது.
எனவே சர்வதேசத்தின் தலையீட்டினால் மட்டுமே எங்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.
கொழும்பில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஏன் என்றால் 2008 முதல் இன்று வரை நாங்கள் விசாரணைகளுக்கே சென்று வருகின்றோம். ஆனால் காணாமல் போன ஒருவரைக்கூட அரசாங்கம் இதுவரை கண்டுபிடித்து கொடுக்கவில்லை.
கண் துடைப்பிற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாங்கள் தொடர்ச்சியாக வேதனைகளை மாத்திரமே அனுபவித்து வருகின்றோம். புதிய அரசாங்கம் வந்து கூட நாங்கள் நிம்மதியை காணவில்லை.
தற்போது கூட புலனாய்வுத்துறையினர் எங்களுடைய வீடுகளுக்கு வருகின்றனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைகளுக்கு சென்று விட்டு வீடு சென்றவுடன் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வந்து கதவை தட்டுகின்றனர்.
அல்லது வீட்டின் மீது கற்களை எறிகின்றனர். தொடர்ந்தும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். சி.ஐ.டி பிரச்சினை இந்த அரசாங்கத்திலும் இன்னும் இருக்கின்றது.
இதனால் இந்த அரசாங்கத்தையும் நாங்கள் நம்பவில்லை. தற்போது தீர்வு எடுக்கப்போவதாக கூறும் அரசாங்கம் எங்களுக்கு உடனடித் தீர்வை தரவேண்டும்.
எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் தீர்வு வேண்டும். மேலும் இரகசிய முகாம்கள் பார்வையிடப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நாங்களும் பார்வையிட வேண்டும். அரசாங்கம் செய்யாது விட்டால் கூட ஆணைக்குழுக்கள் செய்ய வைக்க வேண்டும்.
எதிர்க்கட்சி என தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துக்கொண்டு இருக்காமல் பாராளுமன்றத்தில் கதைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போனது ஆடு, மாடு இல்லை.எமது பிள்ளைகள் உறவுகள்.
10 ரூபாய் பணத்தை தொலைத்தால் கூட தேடி எடுத்து விடுகின்றோம். ஆனால் காணாமல் போது உறவுகளை 8 வருடங்களுக்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்றோம்.
எமது பிள்ளைகளை தேடி ஒவ்வெறு இராணுவ முகாம்களுக்கும் சென்று அவர்களிடம் பேச்சு வேண்டி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தோம். கொடுக்கின்றோம்.
இந்த அரசாங்கம் எங்களை வைத்து ஏமாற்றி வருகின்றது.
இவர்களிடம் இருந்து எங்களுக்கு நல்லிணக்கம் வரும் என்று நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு சர்வதேச விசாரணை கட்டாயம் தேவை என காணாமல் போன உறவுகள் சார்பாக கலந்து கொண்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment