July 1, 2016

மோசடி கும்பலில் இருந்து தப்பிக்க விழிப்படையுங்கள். மற்றவர்களையும் விழிப்படைய செய்யுங்கள்!

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம்  தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும்.



யார் அவர்கள் ?

கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு  அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை , மற்றும் கிளிநொச்சி  ஆகிய  மாவட்டங்களில் தனது கிளையை  திறந்து உள்ளனர். தற்போது யாழ்ப்பணத்தில் புதிதாக கிளையை  ஆரம்பிக்கவும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

இவர்களின் வியாபாரம் என்ன ?

இலங்கையில் வாங்க முடியாத சில பொருட்களை அதன் உண்மை பெறுமதியை  விட  அதிக  விலைக்கு விற்பனை செய்வது. அந்த பொருட்களை ஒருவர்  வாங்கி  அதனை  இருவருக்கு விற்க  வேண்டும். அவ்வாறு விற்றால் அவருக்கு குறிப்பிட்ட  ஒரு  தொகை  கிடைக்கும். அந்த  இருவரும் அந்த  பொருளை தலா இருவருக்கு விற்க வேண்டும் அவ்வாறு  விற்றால் அந்த  இருவருக்கும் தரகு  பணம் கிடைப்பதுடன் , அதனை  முதல் விற்ற நபருக்கு முதல்  கிடைத்த தரகு பணத்தினை  விட இருமடங்கு கூடுதலான தரகு பணம் கிடைக்கும். இவ்வாறாக  அந்த  பொருட்களை விற்றுக்கொண்டு  போக  வேண்டும்.

உதாரணமாக  50 ஆயிரம் ரூபாய்க்கும்  குறைவான ஒரு  பொருளை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பார்கள். அதனை ஒருவர் முதலில் வாங்க  வேண்டும். அதன் பின்னர் அவர்  இருவரை அந்த பொருளை  வாங்க  வைக்க  வேண்டும் . அவ்வாறு  வாங்க  வைச்சால் அவருக்கு 13 ஆயிரம் ரூபாய் தரகு  பணமாக  கிடைக்கும்.

அவரின் வழிகாட்டலில் அந்த பொருளை தலா  இருவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு  வாங்கிய பின்னர் அவர்கள் அதனை  தலா இருவருக்கு  விற்க  வேண்டும்.(நான்கு பேருக்கு) அவ்வாறு வித்தால் இவர்களுக்கு தலா 13 ஆயிரம்  ரூபாய் கிடைக்கும். இந்த  இருவரை சேர்த்து விட்ட முதலாவதாளுக்கு 26 ஆயிரம்  ரூபாய்  கிடைக்கும்.

முதலாவது  ஆள்  சேர்த்து விட்ட  இருவரும்,  சேர்த்து விட்ட மற்ற  நால்வரும் , ஆளுக்கு இருவர் வீதம் எட்டு  பேரை  சேர்க்க வேண்டும். அவ்வாறு  சேர்த்தால் முதலாவது  ஆளுக்கு 52 ஆயிரம்  ரூபாய் பணமும் , பின்னர் சேர்ந்த இருவருக்கும் தலா 26 ஆயிரம் ரூபாயும் , அவர்கள் சேர்த்த நால்வருக்கும்  தலா  13 ரூபாய்  பணமும் கிடைக்கும்.

அந்த  எட்டு  பேரும் ஆளுக்கு  இருவர்  வீதம் 16 பேரை  சேர்க்க  வேண்டும். அவ்வாறு  சேர்த்தால் முதலாவதாக சேர்த்தவருக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும் , பின்னர் சேர்ந்த இருவருக்கும் தலா 52 ஆயிரம்  ரூபாயும் , அதன்  பின்னர் சேர்ந்த நால்வருக்கும் தலா  26 ஆயிரம் ரூபாயும் , அதன்  பின்னர் சேர்ந்த  எட்டு பேருக்கும் தலா  13 ஆயிரம்  ரூபாய்  பணமும்  கிடைக்கும்.

இவ்வாறாக  ஆட்களை  சேர்த்துக்  கொண்டு போக  வேண்டும். முதலாவதாக ஒரு  லட்சத்து  50 ஆயிரம்  ரூபாய்  பணத்தை செலுத்தி சேர்ந்தவர் தனக்கு கீழே  32 பேரை  இதில்  சேர்த்தாலே  அவருக்கு 2 லட்சத்து  8 ஆயிரம்  ரூபாய்  பணம்  கிடைக்கும்.

இரண்டாவதாக  சேர்ந்தவர் 64 பேரை  சேர்த்தாலே 2 லட்சத்து  8 ஆயிரம்  ரூபாய்  பணம்  கிடைக்கும். இவ்வாறாக  பலரை  இணைத்தாலே  போட்ட  முதலை  எடுக்கலாம். இதில்  இலாபம்  பெறக்  கூடியவர். முதலில்  சேர்ந்தவரே. இரண்டாவது  ஆள்  ஓரளவு  இலாபமே  பெற  முடியும். அதன்  பின்னர் சேர்ந்தவர்கள் முதலிட்ட  பணத்தை  பெற  எத்தனை  பேரை  இணைக்க வேண்டும் என  கணக்கு பாருங்கள். அத்தனை  பேரை  இணைப்பது  சாத்தியமாகுமா ? இதில்  ஒருவர்  விலகினால் அந்த தொடர் (செயின்) அறுந்து போகும் . அவ்வாறு  தொடர் அறுந்து  போனால்  அந்த  குழுவிற்கு  செல்லும் தரகு பணமும் தடைப்பட்டு விடும்.

பின்னர்  மீண்டும்  மறுபடியும்  முதலில் இருந்து  ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஒருவர் விலகி  செல்வதனால்  தான் ஒரு குழுவுக்கான தரகு பணம் தடைப்படும் போதே அந்த குழுவில் உள்ளவர்கள் தாம்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த நிறுவனத்திற்கு எதிராக  போராடுவார்கள். ஆனால் அவர்களின்  அந்த போராட்டத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

இவர்களின் இலக்கு யார் ?

வறுமையில்  வாடுபவர்கள்  , திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்டபவர்கள் , வறுமையில் கல்வியை தொடர்பவர்கள் (அவ்வாறான மாணவர்கள் தாம் தம் சொந்த உழைப்பில் கல்வியை தொடரவே  விரும்புவார்கள். அவ்வாறான மாணவர்கள்)  அவர்களே கும்பலின் பிரதான இலக்கு. , பேராசை கொண்டவர்கள் , இளம் பெண்கள் , கிராமபுறத்தவர்கள் , சுயமாக  சிந்திக்க முடியாதபவர்கள் போன்றோரே இவர்களின் இலக்கு.

எவ்வாறு இலக்கை தீர்மானிக்கின்றார்கள் ?

இந்த கும்பலில் புதிதாக சேர விரும்புபவர்களை இந்த கும்பல் யாழில் உள்ள பிரபலமான விடுதியில் சந்திப்பார்கள் கூட்டம் போடுவார்கள். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கூட்டம் நடைபெறும்.

அந்த கூட்டத்திற்கு அவர்களை அழைத்து ஒரு சிலர் தம்மை மாஸ்டர் எனவும் அவர்களுக்கு பட்டங்களும் வழங்கபட்டு இருக்கும் (டைட்டில்) அவர்கள் தாம் ஆரம்பத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்ததாகவும் இந்த கும்பலில் சேர்ந்த பின்னரே தாம் வசதியாக வந்ததாகவும் தெரிவிப்பார்கள்.

அத்துடன் இந்த கும்பலில் சேர்ந்து தாம் உழைத்ததால் மோட்டார்சைக்கிள் , நகைகள் வாங்கியுள்ளதாகவும் , மலேசியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டதாகவும் தெரிவிப்பார்கள்.

கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆசை  வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். அவர்களையும் தம்முடன் இணைய செல்லுவார்கள் ஒரே வருடத்தில் கோடிஸ்வரன் ஆகலாம் என சொல்லுவார்கள்.
(அப்படி பார்த்தால் இந்த கும்பல் யாழ்ப்பாணத்திற்கு வந்து  மூன்று  வருடங்களை  கடந்து  விட்டது. இந்த கும்பலில்  இணைந்து  எத்தனை  கோடிஸ்வரர் ஆனவர்கள்  யாழ்பாணத்தில் எத்தனை பேர்   உள்ளனர்)

தமது வியாபாரம் "நெட்வேர்க்கிங் மார்கெட்டிங்" என்று  சொல்லி  அது  சம்பந்தமாக வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்களை  காட்டுவார்கள். ( இவர்களின் இந்த மோசடிக்கும் நெட்வேர்கிங் மார்கெட்டிங்குக்கும்  என்ன  சம்பந்தம்  என தெரியாது )

அத்துடன் இன்னுமொரு  விடயத்தையும் சொல்லுவார்கள் பில்கேட்ஸ் கூட  சொன்னவராம் தனது  அடுத்த இலக்கு நெட்வேர்க்கிங்  மார்க்கட்டிங் என்று இவர்களின்  இந்த  வார்த்தைகளை நம்பி இந்த மோசடி கும்பலின் வலையில் கூட்டத்திற்கு வந்த பெருமளவானவர்கள் வீழ்ந்து விட, சிலர் குழம்பி போய் செல்வார்கள். மிக சொற்ப அளவானவர்களே இந்த மோசடி கும்பலின் உண்மை முகத்தை அறிந்து செல்வார்கள்.

அடுத்த இலக்கு?

இந்த மோசடி கும்பலின் வலையில்  வீழ்ந்தவர்களுக்கு அந்த கும்பல் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியும் இல்லாத பொருளை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பனை செய்வார்கள்.

அந்த பொருளை அவர்கள் வாங்கிய பின்னர் இதனை எப்படி மற்றவர்களையும் வாங்க  செய்ய  வேண்டும் என்பது தொடர்பில் விஷேட வகுப்புக்கள் நடாத்துவார்கள்.

அதில் கூறப்படும் விடயம் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருந்தால் ஒரு மாணவன் தான்  முதலாவதாக வருவான். இன்னொரு மாணவன் 30 ஆவது பிள்ளையாக வருவான். நீங்கள் முதலாவது பிள்ளையாக வர விரும்புகிறீர்களா ? இல்லை 30 ஆவது  பிள்ளையாக  வர விரும்புகின்றீர்களா ? என யோசியுங்கள்.

நீங்கள்  முதலாவது  மாணவனாக வர விரும்பினால் , உங்களுக்கு தெரிந்த 100 பேரின் பெயரை எழுதி வாருங்கள் அதில் உள்ளவர்கள் பற்றி சில கேள்விகளை உங்களிடம் கேட்டு அவர்களில் 30 பேரை நாங்கள் தெரிவு செய்து தருவோம் அவர்களை நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள் நாங்கள் அவர்களுடன் கதைக்கின்றோம்.

நாங்கள் தெரிவு செய்து தந்த 30 பேரில் கிழமைக்கு நான்கு பேரை மாத்திரம் அழைத்து வாருங்கள் இரண்டு மாதத்திற்குள் அதில் நால்வர் எம் குழுவில் இணைய மாட்டார்களா ? என கேட்டு புதிதாக இணைந்தவர்களை அனுப்பி வைப்பார்கள் அவர்களும் இவர்கள் சொன்னது போல தமக்கு அறிமுகம் ஆனவர்களை அழைத்து வந்து இந்த கும்பலில் இணைத்து விடுவார்கள்.

இந்த கும்பலிடம் கொடுக்கப்படும் 100 பேர் கொண்ட பெயர் பட்டியலில் அவர்கள் வறுமையில்  வாடுபவர்கள்  , திடீர் பணக்காரன் ஆகும் எண்ணம் கொண்டபவர்கள் , வறுமையில் கல்வியை தொடர்பவர்கள் அவ்வாறான மாணவர்கள் தாம் தம் சொந்த உழைப்பில் கல்வியை தொடரவே  விரும்புவார்கள். அவ்வாறான மாணவர்களே இந்த கும்பலின் பிரதான இலக்கு. , பேராசை கொண்டவர்கள் , இளம் பெண்கள் , கிராமபுறத்தவர்கள் , சுயமாக  சிந்திக்க முடியாதபவர்கள் போன்றோரை இனம் கண்டே அவர்களுக்கு வலை விரிப்பார்கள்.

கும்பலின் கொண்டாட்டங்கள்.

இந்த கும்பல் மாதாந்தம் ஒரு கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்யும். அந்த கொண்ட்டாத்திற்கு கொண்டாட்டத்திற்கு வருபவர்களிடமே பணம் வசூலிக்கும்.

அது எவ்வாறு எனில் இந்த கும்பலில் உள்ளவர்களுக்கு பக்கேஜ் எனும் பெயரில் 1000 ரூபாய் டிக்கெட் அடித்து கொடுப்பார்கள். அந்த டிக்கெட்டுகளை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தமது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்வார்கள்.   அந்த டிக்கெட்ட கொள்வனவு செய்தால் , யாழில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இரவு சாப்பாடு சாப்பிட்டு , இசை நிகழ்சியை கண்டு களிக்கலாம். அந்த நேரங்களில் இடை இடையில் இந்த கும்பலில் உள்ளவர்கள் தமது அனுபவ பகிர்வு என தாம் ஆரம்பத்தில் வறுமையில் இருந்ததாகவும் பின்னர் இந்த கும்பலில் இணைந்த பின்னர் தாம் வசதியாக வந்ததாகவும் ஆசை வார்த்தைகளை கூறுவார்கள்.

இந்த கொண்டாட்டம் மூலமும் இந்த கும்பல் பெருமளவான பணம் சம்பாதிக்கின்றார்கள். அதாவது 1000 ரூபாய் வீதம் 1000 ஆயிரம் பேருக்கு இந்த டிக்கெட்ட விற்பனை செய்வார்கள் அதன் மூலம் 10 லட்சம் ரூபாய் வருமானம் பெற்றுக் கொள்வார்கள்.

அதில் விருந்தினர் விடுதி மண்டப வாடகை , சாப்பாடு , இசை நிகழ்ச்சி என்பவற்றின் செலவுகள் போக  குறைந்தது 5 லட்சம் ரூபாய் ஆவது அந்த கும்பலுக்கு இலாபமாக கிடைக்கும்.

இந்த கும்பலின் நிறுவனம் பதிவு செயப்பட்டதா ?

இந்த கும்பல் தமது நிறுவனம் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என கூறி வருகின்றது. இந்த நிறுவனம் இலங்கையில் ஒரு வியாபார நிறுவனமாக மாத்திரமே பதிவு செய்யபட்டு உள்ளது.

வியாபர நிறுவனம் ஒன்றினை இலங்கை கம்பனி சட்டத்தின் பிரகாரம் யாரும் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரமிட் முறை இலங்கையில் தடை.

பிரமிட் முறை இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டதாகும். இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படும் நிதி நிறுவனங்களே , பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் ஆகும்.


இந்த கும்பலிடம் இருந்து எவ்வாறு தப்பலாம்?

இதற்கு இந்த கும்பல் தொடர்பிலான போதியளவான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும். முக்கியமாக இந்த கும்பலின் பிரதான இலக்குக்கு உரியவர்கள் விழிப்படைய வேண்டும். அவ்வாறானவர்களுக்கு விழிப்பாக உள்ளவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து விழிப்படைவதன் மூலமே இந்த கும்பலின் மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment