July 24, 2016

வடக்கு மீள்குடியேற்றச் செயலணிக்கு 4 இணைத்தலைவர்கள் – வடமாகாணசபை மீண்டும் புறக்கணிப்பு!

சிறிலங்கா அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் உருவாக்கப்பட்ட வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார்.


போரினால் இடம்பெயர்ந்த, சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, ரிசாத் பதியுதீன் தலைமையில், அமைச்சர் பைசர் முஸ்தபாவை உள்ளடக்கிய செயலணி ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அண்மையில் அனுமதி அளித்திருந்தது.

இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள எல்லைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய, ரிசாத் பதியுதீன் தலைமையில் இருந்த இந்த மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக சிறிலங்கா அதிபரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க, டி.எம்.சுவாமிநாதன் ஆகிய நான்கு அமைச்சர்கள் இணைத்தலைவர்களாக பணியாற்றுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment