June 10, 2016

புதிய அரசின் கொள்கைகள் சர்வதேச அங்கீகாரத்திற்கு அடிப்படை! எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்!

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அடிப்படையாகவுள்ளன.
நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகின்றது என்ற நம்பிக்கை சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளமைக்கு பிரேரணையில் கைச்சாத்திட்டவர்கள் உட்பட கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தியஎதிர்க்கட்சித் தலைவர் பாரளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே செலவீனங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இச்சமயத்தில் நான் சில பொது அவதானங்களை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளேன்.

இந்த நாட்டின் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் காணப்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நாட்டின் படு கடன் தொகை அதிகரித்தது. வெளிநாட்டுக் கடன்கள் அதிகளவில் பெறப்பட்டன. வருமானங்கள் எவையும் பெறப்படவில்லை. நாட்டின் நன்மை தொடர்பாக கருத்திற் கொள்ளப்படவில்லை. அதிகப்படியான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக பொது மக்கள் நிதியானது தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இந்தப் பிரேரணையில் கைச்சாத்திட்டவர்கள் உட்பட முன்னைய அரசாங்கத்தின் அனைவரும் பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்றத்தின் மீயுயர்தன்மை குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. பொதுமக்கள் நிதியை பாராளுமன்ற அங்கீகாரத்துடன் செலவிட வேண்டும்.

கடந்த காலங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அவதானத்துடன் தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களின் நிதியை செலவீனத்திற்கு உட்படுத்துவதில் எவ்விதமான மாற்று அணுகு முறைகளையும் மேற்கொள்ள முடியாது. அவதானமாக நிதிகையாளுகை செயற்பட வேண்டும்.

தற்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அடிப்படை விடயங்களுக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தூய்மையான நடவடிக்கைகளை எடுக்கின்றோமோ என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏனையவர்கள் குற்றம் சாட்டாத வகையில் அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். நிதி அமைச்சரும் அவருடைய அமைச்சும் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் செலவீனங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சதம் செலவிடப்படும் போது வெளிப்படைத் தன்மையுடன் நாட்டு மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்கின்றார். அவருக்கு சிறந்த அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்த சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து மக்களும் ஒருமித்து வாழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகின்றது என்ற நம்பிக்கை சர்வதேச சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

அனைவரும் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே எம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும். மக்கள் நன்மைக்காக செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment