சே.குவேரா என்ற புரட்சிக்காரரின் வாழ்க்கையை எத்தனை பேர், எத்தனை முறை எழுதினாலும் ‘புதிதாக ஏதேனும் சில அம்சங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. எழுதியிருப்பவர் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் செயற்பாட்டளாரும், அரசியல் செயற்பாட்டாளருமான, தோழர் சு.பொ. அகத்தியலிங்கம்
. ‘விடுதலைத் தழும்புகள்’, ‘சாதியம்: வேர்கள்-விளைவுகள்- சவால்கள்’ உள்ளிட்ட 16 நூல்களின் ஆசிரியர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். மனதளவிலும், எழுத்திலும் இன்றும் ஒரு வாலிபர்தான். தீக்கதிர் நாளிதழின் பொறுப்பு ஆசிரியராக இருந்து தன் கூர்மையான எழுத்துக் கணைகளை வீசிக் கொண்டே இருந்தவர், பத்திரிகையாளராக இருந்ததால் எழுத்தில் தெளிவும், எளிமையும், அழகும் மிளிரும் நடை கைவரப் பெற்றவர்.
“ ‘எழுதச் சலிக்காத நெருப்பு வரிகள்’-என்பதன் பொருளாய் இருப்பது சேகுவேராவின் வாழ்கை வரலாறுதான்” – என்று இந்நூலில் தொடக்கத்தில் சு.பொ.அ கூறுகிறார். மறுக்க முடியாத உண்மை இது. மானுடர் நடுவே ஒரு விசித்திரம் சே. அர்ஜென்டினாவில் பிறந்தவரான சேகுவேரா இரண்டு வயதிலிருந்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர். ஆயினும் தாய்-தந்தையரின் ஊக்கத்தினால் நீச்சல், மலையேற்றம், குதிரைச் சவாரி என தொடர் பயிற்சிகளாலும் மருத்துவ சிகிச்சையாலும் உடலை வலுவாக வைத்துக் கொள்ள முயன்றவர், போர்க்களங்களில் ஒரு கொரில்லாவாக ஆயுதமேந்திப் போராடியவர். கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போரிட்டு வெற்றி கண்டவர். காங்கோவிலும், பொலிவியாவிலும் விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்க வேண்டுமென தன்னை ஒப்புக் கொடுத்தவர். பொலிவியாவிலேயே வீரமரணம் எய்திவர்.
தாயின் மீது எல்லையற்ற அன்பு வைத்திருந்தவரான ‘சே’ என்ற மகனின் பாச உணர்வுகள் இந்நூலில் ஆங்காங்கே கொப்பளித்துக் கிளம்புகின்றன. பதினைந்து வயது வரை, சேவின் குடும்பம் நகரம் விட்டு நகரமாக ஒரு வீட்டின் ஒப்பந்த காலம் முடியும் போதெல்லாம் வேறொருவீடாக மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. ஜுல்ஸ் பெர்ன், டூமாஸ், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன், ஜேக் லண்டன், எமிலியோ சர்க்காரியே போன்றோர் எழுதிய வீரசாகச நாவல்கள் சிறுவன் சே மிக விரும்பிப் படித்தவை. வாழ்நாளின் இறுதிவரை சே இடைவிடாமல் சாகசப் பயணங்களை மேற்கொண்டதற்கு மேற்கண்ட இரு அம்சங்களே அடிப்படைக் காரணங்கள் என்று சொன்னால் அது மியைல்ல.
மருத்துவம் பயின்றவர்; பொறியியல் படிக்க விரும்பியவர். மருத்துவராக ஆனது தற்செயலானதல்ல. சேவின் பாட்டி அனாவிஞ்ச்சின் மரணம், அவரது மிகுந்த நேசத்திற்குரிய தாயார் லெஸியா கடும்புற்று நோயினால் அவதிப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டது போன்ற நிகழ்வுகளினால்தான் அவருடைய கவனம் மருத்துவத்தின்பால் திரும்பியது. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளனாய் வர வேண்டுமென்று ‘கனவு கண்டவரான சே, புரட்சிக்காரராய் ஆன கதைதான் இந்தப் புத்தக வடிவில் கூறப்பட்டுள்ளது.
1949-ஆம் ஆண்டில் தானே வடிவமைத்த மோட்டார் சைக்கிளில் சுமார் 4500 கி.மீ. பயணம் செய்கிறார் சே. அர்ஜென்டினாவின் இயற்கை அழகையும், நாகரிகக் கூறுகளையும் அள்ளிப் பருகினார்தான். ஆனால், அவர் மனதில் ஆழப்பதிந்ததென்னவோ மானுடத்தின் துயரம் நிறைந்த ஆன்மாக்களின் அகதரிசனமே: “மருத்துவ மனைகளில் கிடக்கும் நோயாளிகளிடமும், சிறையில் வதைபடும் மனிதர்களிடமும், காலடியில் பெருக்கெடுத்தோடும் ரியோகிராண்ட் நதியினைக் கவனித்தபடியே நாம் பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களிடமும்தான் மானுட ஆன்மா பிரதிபலிக்கிறது” என்பது சே வின் கடிதம் சொல்லும் பயணப் பதிவு.
அதே சமயம், வர்த்தகக் கப்பல் ஒன்றில், மக்கள் நல அமைச்சகத்தின் செவிலியராகப் பொறுப்பேற்று பிரேசில், டிரினிடாட், வெனிசுலா நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்திருந்த போதிலும் அந்தப் பயணங்கள் சேவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பெரும் பகுதி நேரத்தைக் கப்பலிலேயே கழிக்க நேர்ந்ததால் மனம் நோகிறார் சே. 1952, ஜனவரி 4-ஆம் நாளில் மீண்டும் லா பாடெரோஸா என்ற மோட்டார் சைக்கிளில், தன் அன்பு நண்பனான ஆல்பர்ட்டோவுடன் மற்றொரு சுற்றுப் பயணத்திற்குப் புறப்படுகிறார் அவர். வழியில் மிராமர் கடற்கரையில் தன் காதலி சிச்சினாவைச் சந்திக்கிற சே, பயணக்குறிப்பில் அதைப் பற்றி எழுதும்போது ஒட்டிரோ சில்வாவின் கவிதையை அசைபோடுவதை மேற்கோள் காட்டுகிற அகத்தியலிங்கம், அடுத்த பக்கத்திலேயே சிச்சினாவின் கடிதம் சேவின் இதயத்தில் ஒரு குண்டாக விழுவதையும் பதிவு செய்கிறார். காதலை விட இந்த உலகை அறியும் வேட்கை சேவைத் துரத்தியதன் விளைவு அது!
பயணம் தொடர்கையில், தொல்லைகளும் தொடர்கின்றன. வழியில் பார்த்த இயற்கைக் காட்சிகள் கண்களைக் கவர்ந்தாலும், கருத்தில் சலிப்பு நேர்கிறது:”இயற்கைக் காட்சிகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரிகின்றன. கிராமங்களின் உண்மையான ஆன்மாவை நாம் நெருங்க முடிவதில்லை. கிராமங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்,ஒரே இடத்தில் பல நாட்கள் கழிக்க வேண்டியிருக்கும்.”
சிலி நாட்டின் புகழ்பெற்ற சுரங்கங்களின் மேற்பார்வையாளராய் இருந்த கவிஞர் ஒருவரிடம், அதற்காக எத்தனை உயிர்கள் பலிவாங்கப்பட்டன என்று சே கேட்கிறார். இப்படியொரு கேள்வியைத் தன்னிடம் யாருமே இதுவரை கேட்டதில்லை என்று சொல்கிறார் கவிஞர். கம்யூனிஸ்டுகளை சே முதன்முதலில் இங்குதான் சந்தித்ததாகத் தெரிகிறது. அங்கு அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. சே எழுதுகிறார்:”அங்கே சிலியத் தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளுமான ஒரு தம்பதியருடன் நட்பு கொண்டோம். பாலைவன இரவில், குளிரில் ஒருவரோடொருவர் நெருங்கி உட்கார்ந்திருந்த அந்த ஜோடி, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் வாழும் பிரதிநிதிகள். அவர்கள் போர்த்திக் கொள்ள ஒரு போர்வை கூட இல்லை. அவர்களுக்கு எங்களுடைய போர்வை ஒன்றைக் கொடுத்து விட்டு, மற்றொரு போர்வையை நானும் ஆல்பார்ட்டோவும் போர்த்திக் கொண்டோம். என் வாழ்க்கையிலே நான் அனுபவித்த மிகவும் குளிரான நாள்”
‘இப்படிப்பட்ட மனிதர்கள் மீதுதான் அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது என்பதை நினைத்தாலே உள்ளம் பதறுகிறது’ என்கிறார் சே. புத்தகம் நெடுக இப்படியான மேற்கோள்கள் பொருத்தமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
சேவுக்கும், ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் இரண்டு புரட்சிக்காரர்களிடையேயான நட்புரீதியான முரண்களே தவிர, பகை முரண்கள் அல்ல என பல இடங்களில் தக்க எடுத்துக் காட்டுகளுடன் உறுதிபடச் சொல்கிறார் ஆசிரியர். சேவின் பலங்கள் மட்டுன்றி, பலவீனங்களும் சொல்லப்படுகின்றன. புரட்சித் திருவுருவாக சேவைத் தன்எழுத்துத் தேரில் இருத்தி வைத்து உற்வசமூர்த்தியென அவரை வீதியுலா கொண்டு வரவில்லை ஆசிரியர். மாறாக, கியூப மண்ணிலும், பொலிவிய காங்கோ மலைகளிலும், புழுதியும், இரத்தமும் படிந்து நலிந்து திரிந்தவாறு மானுட மேன்மைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்த ஒரு புரட்சி வீரனை உள்ளது உள்ளபடி, கருப்பு-வெள்ளைப் புகைப்படமாகப் பதிவு செய்திருக்கிறார். சு.பொ.அ.
சே-வின் வாழ்க்கைப் பாதை மிகவும் கரடுமுரடனாது; புரட்சிக்காக என மேற்கொண்ட சாகசங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை, கியூபாவில் புரட்சி வென்றதும், பொருளாதாரம் என்னவென்றே தெரியாத நிலையிலேயே மத்திய தேசிய வங்கியின் நிர்வாகத் தலைவராக சேவை நியமிக்கிறார் காஸ்ட்ரோ. 1959-1961 ஆகிய இரண்டாண்டுகள், பொருளாதாரத்தைப் புரிந்து கொண்டு, மார்க்சிய மூலதன வகுப்புகளில் மாணவராயிருந்து தன் பதவிக்கு நியாயம் வழங்குவதற்குப் போராடுகிறார் சே.
எதிரிகளிடமிருந்து அவர் இரக்கத்தை எதிர்பார்த்ததுமில்லை; எதிரியிடம் இரக்கம் காட்டியதுமில்லை என்பது சே வின் ஒரு முகம். அதே சமயம், தனிமனித வாழ்க்கைச் சிக்கல்களை அவர் வெகுநிதானமாகவே கையாண்டிருப்பதையும் இந்நூல் ஒப்புநோக்கிப் பதிவு செய்கிறது.
கொலம்பியா, பொலிவியா, அர்ஜென்டினா-உட்பட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த சே தன்னளவில் கடுமையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இவற்றுள் ஏதாவது ஒரே ஒரு நாட்டில் புரட்சி மலருமானல் ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவையுமே அது உலுக்கி வீறு கொண்டெழச் செய்யும் என்பது சேவின் நம்பிக்கை. ஆனால் அவரது கனவு அன்றைய சூழலில் நனவாகவில்லை. காங்கோவில் தன் அனுபவத்துக்குப் பின் சே எழுதுவது எத்தனை வலி நிரம்பியதாய் இருக்கிறது: “போராட விரும்பாத நாட்டிற்கு நம்மால் விடுதலையை வாங்கிக் தர முடியாது. இங்கு போராட்ட உணர்வைத் தூண்ட வேண்டியதாயிருக்கிறது. வீரர்களை விளக்கு வெளிச்சத்தில் தேட வேண்டியிருக்கிறது”
சேவை அமெரிக்க ஏகாதிபத்தியமும், சி.ஐ.ஏ.வும் எத்தனை முறை ‘கொன்று’ புதைத்தாலும் மீண்டும் மீண்டும் அவர் பிறந்து எழுந்து வருவதை இந்நூல் நிறுவுகிறது. எட்வர்டோ கலியானா போன்ற நவீன இலக்கிய எழுத்தாளரின் வார்த்தைகளைப் பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார் நூலாசிரியர். சே வைப் பற்றிய அவதூறுகளையெல்லாம் ஒவ்வொன்றாக ஆணித்தரமாக அம்பலப்படுத்துகிறார். ஹோஸெமார்த்தி என்ற கியூப முன்னோடியின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால், இந்த நூல் “கற்களை வைத்திருக்கிற கூடையல்ல, கருத்துகளை வைத்திருக்கும் கூடை!”
சே-குவேராவின் கடிதங்களில் ஒன்றில், ஃபிடலுக்காக சே இசைத்திருக்கும் ஒரு பாடலின் வரிகள் இவை:
“… நாங்கள் எங்களது வழியை
எதிர்த்து நிற்கிற
இரும்பு ஈட்டிகளில்
மாட்ட வேண்டி வந்தால்
எங்களுக்கு வேண்டியது ஒன்றுதான்.
தகர்ந்து போன
எங்களது
கொரில்லா எலும்புகளுக்குப்
போர்த்த வேண்டி
கியூபாவின் கண்ணீரால் நெய்த
ஒரே ஒரு கம்பளம்
(நன்றி: சேகுவேராவின் கடிதங்கள் – தமிழில்: உமர். வெளியீடு: புலம்)
– சேவுக்கு, அந்தக் கம்பளம் கிடைத்ததா என்ற கேள்வி மனதைக் குடையத்தான் செய்கிறது. சு.பொ.அகத்தியலிங்கத்தின் நூலிலும் இப்படியான பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முடிந்தவரை விடைகளையும் தந்து செல்கிறார் ஆசிரியர்.
“… நாங்கள் எங்களது வழியை
எதிர்த்து நிற்கிற
இரும்பு ஈட்டிகளில்
மாட்ட வேண்டி வந்தால்
எங்களுக்கு வேண்டியது ஒன்றுதான்.
தகர்ந்து போன
எங்களது
கொரில்லா எலும்புகளுக்குப்
போர்த்த வேண்டி
கியூபாவின் கண்ணீரால் நெய்த
ஒரே ஒரு கம்பளம்
(நன்றி: சேகுவேராவின் கடிதங்கள் – தமிழில்: உமர். வெளியீடு: புலம்)
– சேவுக்கு, அந்தக் கம்பளம் கிடைத்ததா என்ற கேள்வி மனதைக் குடையத்தான் செய்கிறது. சு.பொ.அகத்தியலிங்கத்தின் நூலிலும் இப்படியான பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முடிந்தவரை விடைகளையும் தந்து செல்கிறார் ஆசிரியர்.
No comments:
Post a Comment