June 9, 2016

ஆயுத களஞ்சியசாலை வெடிப்பு திட்டமிட்ட சதி!- விக்கிரமபாகு கருணாரத்ன!

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பு திட்டமிட்ட சதியாக இருக்க வேண்டும்.
அத்துடன் இது அரசாங்கத்தின் செயல் எனக் கூறுவது வேடிக்கையாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கொஸ்கம சாலாவவில் அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியமானது மிகவும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வெடிப்பு இடம்பெற்ற தினம் களஞ்சியசாலை இருக்கும் இடத்தில் பயிற்சி நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பானது சதி நடவடிக்கையா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதுவும் கூறமுடியாத நிலைமையில் இது இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வெடிப்புச் சம்பவமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.

மேலும் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பானது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயல் என விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். அவ்வாறாயின் யாராவது செய்திருக்கலாம் என அவரும் ஏற்றுக்கொள்கிறார். விமல் வீரவன்ஸவின் இந்த கூற்றானது அடிப்படையற்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு செயலை மேற்கொள்ளப் போவதில்லை.

அரசாங்கம் பொருளாதார பிரச்சினையில் செய்வதறியாது திண்டாடிக்கொண்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமாக அரசாங்கத்தை விமர்சித்து வந்தனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு மக்கள் பலம் இல்லை. அதனால் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு சதி நடவடிக்கைகளையே மேற்கொள்ள முடியும். அவர்களின் சதி நடவடிக்கைகளுக்கு சில இராணுவத்தினரையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

சர்வதேச நாடுகள் நல்லாட்சி அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து உதவி செய்து வருகின்றன. ஆனால் பாராளுமன்றில் இருக்கும் சிலர் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதானது மிகப்பெரிய நகைச்சுவையாகும் என்றார்

No comments:

Post a Comment