சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் ஒரு பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை இன்னொரு பாதையிலும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுவரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நீண்ட கால பொது போக்குவரத்துக்காக மேலும் புதிதாக மெட்ரோ ரெயில் பாதைகள் அமைப்பதற்கு சாத்தியக் கூறு உள்ள இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, செங்குன்றம் – சிறுசேரி, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, விம்கோநகர் – சோழிங்கநல்லூர், பல்லாவரம் – ஆவடி, வண்டலூர் – பட்டாபிராம், திருமங்கலம் – பருத்திப்பேட்டை ஆகிய 6 புதிய வழித்தடங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.
அடுத்த கட்டமாக இந்த வழித்தடங்களில் எந்தெந்த சாலைகள் வழியாக வழித்தடம் அமைப்பது, தேவையான நிலங்கள், கட்டிடங்கள் பாதிப்பது, இழப்பீட்டு தொகை வழங்குவது, ரெயில் நிலையங்கள் அமைக்க வேண்டிய இடங்கள் உள்பட அனைத்து தகவல்களையும் டெண்டர் கோரும் நிறுவனங்கள் 6 மாதங்களில் தயாரித்து அனுப்பும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment