June 9, 2016

யுத்தத்தின் போது காயமடைந்த சிலரின் உடலில் உலோகம் காணப்படுவது குறித்து அரசாங்கம் கவனம்!

யுத்தத்தின் போது காயமடைந்த பலரின் உடலில் உலோகத் துண்டுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உடலில் குண்டுத் துண்டுகள் அல்லது எறிகணைத் துண்டுகள் காணப்படுவோரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த விடயம் குறித்து இன்று பிரதமர் ரணில் விக்ரசமசிங்கவிடம் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் உடலில் இவ்வாறான இரும்புத் துண்டுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சில இளைஞர்கள் இந்தியா சென்று உடலில் காணப்படும் இரும்புத் துண்டுகள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஐந்து லட்சம் ரூபா இந்திய ரூபா செலுத்தி அண்மையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரும் மீள்குடியேற்ற அமைச்சரும் இணைந்து இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment