June 29, 2016

இலங்கையில் அரசியல் ஜனநாயகம் கிடையாது! நல்லாட்சி என்பது போலி நாடகம்!- ஜெனிவாவில் அனந்தி!

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் என்ற தேசிய இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு வருகின்ற இன அழிப்புக்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருக்கிறது.
இந்த இன அழிப்புச் சித்தாந்தம் இலங்கை அரச இயந்திரத்தினுள் பல அடுக்குகளில் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இன்று நடைபெற்ற உபகுழுக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதை நியாயப்படுத்தும் வகையில் இலங்கையில் அரசியல் பெரும்பான்மை சிறுபான்மை என்ற வகைப்படுத்தல் இன ரீதியாகவே பேணப்படுகின்றது.

இலங்கைத் தீவில் அரசியல் ஜனநாயகம் என்பது கிடையாது. அதைப் போலத் தோற்றமளிக்கும் இனரீதியான ஜனநாயகமே அங்கிருக்கிறது.

ஓர் இன அழிப்புச் சித்தாந்தத்தில் வேரூன்றியிருக்கும் ஒற்றையாட்சி அரசால் இனரீதியான ஜனநாயகத்தைக் கூட ஒரு நேர்மையான ஜனநாயக முறையாக சொல்லாட்சியைப் பயன்படுத்துவதனால் 'நல்லாட்சியாக' ஒருபோதும் நடாத்த முடியாது. அதை ஒரு போலியான நாடகமாக மாத்திரமே நடாத்தமுடியும்.

இலங்கை அரசியல் யாப்பு என்பது இந்த அடுக்குகளை ஒற்றையாட்சி அரச இயந்திரம் ஒன்றூடாகக் கட்டிக்காப்பதற்குப் பொருத்தமான வகையிலேயே ஒவ்வொரு காலகட்டத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே இலங்கைத் தீவின் உள்ளகத்தளமாகும்.

உலகளாவிய அரசியற்சூழல் பிராந்திய அரசியற் சூழல் என்ற இரண்டு தளங்களையும் இந்த உள்ளகத்தளத்தின் போக்குக்கு சார்பாகப் பேணிக் கொள்வது என்பதே இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளியுறவுக் கொள்கையாகும்.

இந்த வெளியுறவுக்கொள்கை முழுமையாகவே ஒரு நாடகம். அதில் நடிப்பவர்கள் போலியான செய்திகளை உலகுக்குச் சொல்பவர்கள்.

இதற்கு அப்பால் சர்வதேச அரசியல் அரங்கிலும் ஒவ்வொரு சக்திமிக்க நாடும் தனது உள்ளகத் தேவையை முன்னிலைப்படுத்தியே தனது வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும்.

இதிலே அவர்களுக்குத் தேவையான நாடகத்தில் இலங்கை அரசின் நாடகமும் ஒரு பங்காக அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாடகங்களின் உலகமே இராஜதந்திரம் என்றும் இதிலே நாங்களும் நடிகர்களாக வேண்டும் என்றும் நாமும் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

இப்படியே எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்து நடாத்துகின்ற இராஜதந்திர நாடகத்தின் கடுமையான தாக்கங்ளுக்குள்ளே தான் இங்கே ஜெனீவாவில் இயங்குகின்ற மனித உரிமைகளை மையப்படுத்திய சர்வதேச நீதியும் சிக்குப்பட்டுக் கிடக்கிறது.

இங்கே தமிழர்களுக்கான வெளியறவுக் கொள்கையை முன்னெடுப்பதற்கென்று ஒரு அரசும் இல்லை.

70 மில்லியன் தமிழர்களைக் கொண்ட இந்திய அரசிடம் தனது மக்களான தமிழக மக்களின் தமிழக அரசின் ஒன்றித்த கருத்தை மதிப்பளிக்கும் வெளியுறவுக் கொள்கை இல்லை.

இந்தச் சூழலில் எமது காயங்களையும் எமது இழப்புகளையும் காணாமற்போன எங்கள் உறவுகளையும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களையும் குறித்து நாம் பேசுவதை குரல்கொடுப்பதைக் கூட சுதந்திரமாகச் செய்யமுடிவில்லை.

முடியாத வகையில் எம்மைக் கையாளுவதற்கென்று பல வலயங்களையும் நடிகர்களையும் முழுநேர வேலைக்கு அமர்த்தி நாம் கையாளப்படுபவர்களாக மாற்றப்பட்டு வருகின்றோம்.

ஆகவே ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமை என்பது இந்தக் கையாளுகைகளுக்கு உட்படாமல் சுயமாக எந்த அரசின் தயவையும் கோரி நின்று மண்டியிட்டுக் கொள்ளும் அரசியலாக நாடகமாக அமையக்கூடாது.

அது உரிமையின் பாற்பட்டதாகவும் நேர்மையானதாகவும் மனித குலத்திற்கு நன்மையானதாகவும் அமைய வேண்டுமானால் ஈழத்தமிழரின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கான வெளியகப் பரிமாணம் என்ன? அது எந்தத் தளத்தில் அமையவேண்டும்? என்பது குறித்த தெளிவான கொள்கை சார்ந்த அணுகுமுறை எம்மிடம் இருக்க வேண்டும்.

யார் எமது சர்வதேச நட்புச் சக்தி என்பதை தமிழர்கள் தெளிவாகத் தீர்மானிக்க வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது.

மிகவும் ஆபத்தான கட்டமைப்பு இன அழிப்பை எதிர்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேசப் பரிமாணத்தை எப்படி வகுத்துக் கொள்கிறது என்பதிலேயே எமது எதிர்கால இருப்பு தங்கியிருக்கிறது.

அதைப்பற்றி ஜெனிவா நாடக மேடையில் கலந்து கொள்கிற கலந்து கொள்ளாத தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் பகிரங்கமாக தமது கொள்கையை முன்வைக்குமாறு எமது விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய அனைவரின் ஆன்மாக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமையின் சர்வதேசப் பரிமாணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வகுப்பதில் எமது முதமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரனின் பங்கையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பங்கும் அவசியமானதாக எனக்குப்படுகிறது.

ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான அடுத்த நகர்வு அதன் வெளியுறவுப் பரிமாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று எனது கருத்தை முன்வைத்து அமர்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment