June 11, 2016

முள்ளிவாய்க்காலில் மாணவர்களை அச்சுறுத்தும் ஆட்லறிக் குண்டுகள்!

2009ல் தமிழ்மக்கள் மீது இராணுவத்தினரால் மழையென பொழியப்பட்ட குண்டுச் சிதறல்கள் இன்னமும் முள்ளிவாய்க்காலில் பரவிக்கிடக்கின்றது.


முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு அருகே உள்ள ஆட்லறிக் குண்டுகள் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அச்சுறுத்திக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2009ம் ஆண்டு மே18ல் இறுதி யுத்தம் முடிவிற்கு வந்ததை யாவரும் அறிவோம். ஆனால் இறுதி யுத்தத்தின் முடிவு ஜூலை மாதத்தையும் தாண்டி நடைபெறும் அளவிற்கு விடுதலைப்புலிகளிடம் ஆயுத பலமும் ஆட்பலமும் அப்போது இருந்தது.

2009ல் இலங்கை அரசு அப்பாவி பொதுமக்களை யுத்ததின் மூலம் பலியெடுத்துக்கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்காண தமிழ்மக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர்.

2009 ஜூலை மாதம் வரை யுத்தத்தை இழுத்துச் சென்றால் பொதுமக்களின் இழப்புக்கள் அதிகமாகுமே தவிர வேறு எந்த அதிசயமும் நிகழப்போவதில்லை என்பதை விடுதலைப்புலிகளின் தலைமை நன்கு உணர்ந்ததன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆயுதக்கிடங்குகள் விடுதலைப்புலிகளால் மிகவும் பாதுகாப்பாக தகர்த்து அழிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஒருபகுதி போராளிகள் சரணடைந்தார்கள். ஒருபகுதி போராளிகள் பொதுமக்களின் நடமாட்டத்தை தாண்டிச் சென்று எதிரிகளுடனும் துரோகிகளிடமும் போராடி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நுளைய முயற்சித்தார்கள்.

விடுதலைப்புலிகளின் விவேகமான செயற்பாட்டின் காரணத்தினால் தான் மே18 யுத்தம் முடிவடைந்ததே தவிர அது இராணுவ வெற்றியாக கருதமுடியாது.

இலங்கை இராணுவத்தினர் மே 18ல் விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவில்லை என்பதை புனர்வாழ்வின் மூலம் மீண்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் புலம்பெயர்ந்த போராளிகளும் சாட்சியமாகின்றனர்.

மற்றும் விடுதலைப்புலிகளின் பெறுமதியான ஆயுதக்கிடங்குகள் எதனையும் இராணுவத்தினர் இதுவரை கைப்பற்றியதாக செய்திகளும் இல்லை.

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு தொடர்பான செய்திகளை யாவரும் அறிவோம். போரின் இறுதிக்கட்டத்தில், 2008-2009ம் அண்டு காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள், குண்டுகள், வெடிபொருட்களே அங்கு சேமிக்கப்பட்டிருந்தன என்று இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு ஓரிரு நாட்களில் வெடித்து சிதறி விட்டது. ஆனால் 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மே 18யை தாண்டி ஜூலை வரை யுத்தத்தை இழுத்துச்சென்றிருந்தால் கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்காலில் எஞ்சிய தமிழ்மக்களின் உயிர்களையும் குடித்திருக்கும் என்பது நிச்சயம்.

இதே கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் இருந்து பரிமாறப்பட்ட போர் ஆயுதங்கள் தான் 2009ல் தமிழ்மக்கள் மீது மழையாய் பொழியப்பட்டுள்ளது.

அவற்றின் எச்சங்கள் இன்னமும் அழிந்து விடாமல் முள்ளிவாய்க்காலில் கிடக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment