June 29, 2016

கருணா அம்மானுக்கு வழங்கிய அரச கட்டிடத்தை மீளப் பெறாத அரசாங்க அதிபர்?

முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு வழங்கப்பட்ட அரசாங்க கட்டிடம் ஒன்றை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இன்னும் மீளப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


வின்சன்ட் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான அரச உத்தியோகத்தர்களின் தங்குமிட விடுதியே இவ்வாறு மீளப்பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றை கைப்பற்றியிருந்தார்.
இந்த தங்குமிட விடுதியில் இருந்தே அப்போதைய கருணா குழுவினர் இயங்கிவந்ததுடன் தங்களது அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

தற்பொது கருணா அம்மான் அவர்கள் பதவியில் இல்லை என்பதோடு கருணா குழுவனரும் இல்லாது போய்விட்டனர்.

ஆட்சி மாற்றம் நடைபெற்று ஒரு வருடம் தாண்டியுள்ள நிலையில் அரசாங்க விடுதியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இன்னும் மீளப்பெறவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

குறித்த கட்டிடத்தில் தற்பொது கருணா அம்மானின் முன்னாள் செயலாளர் குடியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் சமூகசேவை பயன்பாடுகளுக்கு பொதுக்கட்டிடம் ஒன்று இல்லாது பல அமைப்புக்கள் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அரச கட்டிடம் ஒன்று தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமையானது பொது அமைப்புக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே உடனடியாக குறித்த அரசாங்க விடுதியை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மீளப் பெற்று பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment