எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு….. இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது….. டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து.. இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது.
இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம்.
நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்! கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள்.
அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந்தச் செய்தியைச் சொல்லும் துயரம் எனக்கு வாய்த்தது.
தனக்கு அப்பா வேண்டும் என்று என்னைக் கட்டித் தழுவிக் கதறியவளை என்னை அவளது தந்தையாக ஏற்குமாறு கெஞ்சியிருந்தேன். சிலநாளில் என்னுடைய காயங்களுக்கு சிகிச்சையளித்தவள் இன்று என்னோடு காயமுற்றவளாய் உயிருக்காகப் போராடியபடி இருக்கின்றாள்.
பக்கத்தில் என்னுடைய மருத்துவக் கவனிப்பில் என்னோடு ஒன்றாகக் காயமுற்ற கேணல் கீர்த்தி ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரம் செயலிழக்கும் (ஒட்சிசனின்றி உயிர் காக்க முடியாத நெஞ்சதிர்வுக் காயம்) போது சாவதற்காக உயிரை இழுத்துக் கொண்டிருக்கின்றார்.
என் மருத்துவ வாழ்வனைத்தும் ஒன்றாக என்போல் ஒரு காலுடன் வந்த என் சக மருத்துவன் இசைவாணன் தனது மூன்று குழந்தைகளும் சிதறிப் பலியாகிவிட தனது நல்ல காலின் தொடை என்பு முறிவுடன் குப்பி கடிக்க அனுமதி கேட்டுக் கொண்டே இருக்கிறான். நாளை அவன் குப்பி கடிப்பான் என்று புரியாமல் பொறுக்கச் சொல்லிக் கேட்கிறேன்.
மூத்த மருத்துவப் போராளி லோலோ இரண்டாம் தடவையாக இன்று நடந்த வயிற்றறுவை சத்திர சிகிச்சை முயற்சி வெற்றியளிக்காததை புரியாமல் அரை மயக்கத்தில் கிடக்கின்றான்.
அதுவரை இருந்த இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உயிர்வாழப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்து கூறி பாரிய வயிற்றுக்காய தையலோடு மருத்துவ மனையை விட்டு அழைத்துச் செல்லப் படுகின்றார்.
வைத்தியர் வரதராஜா தன் உயிர்மேல் எந்தப் பற்றுதலும் அற்றவராய் தான் காப்பெடுக்க வேண்டிய எண்ணமற்றவராய் வெளியில் நின்றார்.
அவரது இறுதி மருத்துவமனை மூன்றாவது முறை தாக்கப்பட்டு கொல்லப்பட்டோரின் உடல்கள் குவியலாய்க் கிடக்க செயலற்று நின்றார். எங்கள் மருத்துவமனையின் வாசல் வழியில் இரு பக்கமும் உடல்கள் வரம்பு போல அகற்றப்படாமல் கிடக்க சத்திர சகிச்சையின் பின் எழமுடியாமல் கிடந்தவர்களுக்கு சேலைன் பதிதாக மாற்றிப் போட்டுவிட்டு நடு இரவில் வெளியேறினோம்.
Dr.வாமன்
No comments:
Post a Comment