முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மத குருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ரவிகரன், சாள்ஸ் நிர்மலநாதன், டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
1ஆம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவுதினம் இன்று நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
வட மாகாண சபையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில் கடந்த 12ஆம் திகதி முதல் தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.
இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூறும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுமென வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும், வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
2006ஆம் ஆண்டில் மாவிலாற்றில் ஆரம்பித்த நீர்ப் பிரச்சினை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் தமிழீழ விடுலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தது.
புலிகளை முழுமையாக அழித்துவிடவேண்டும் எனவும், தாக்குதல் திட்டத்தினை திசைமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பொதுமக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக அப்போதைய அரசாங்கம் அறிவித்ததோடு, அந்த பிரதேசங்களிலேயே பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேசம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், 2009 மே 18ஆம் திகதி இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு, 45 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment