May 24, 2016

விலகுகிறார் விஜயகாந்த்?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
தேர்தலுக்கு முன்பு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய தேமுதிக தேர்தலில் தோல்வியை சந்தித்ததற்கு தவறான கூட்டணிதான் காரணம் என சொல்லப்படும் நிலையில் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது கூட்டணி கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
உள்ளாட்சி தேர்தல் வரை மக்கள் நலக்கூட்டணி தொடருமா என்பது பலருடைய சந்தேகத்திற்குரிய கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது தோல்விக்கான காரணங்களை விஜயகாந்த் கேட்டுள்ளார். சரியான கூட்டணி அமைக்காததால்தான் தோற்றதாக மாவட்டச் செயலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலிலாவது சரியான முறையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று தினமும் 10 மாவட்டச் செயலாளர்களை நேரில் வரவழைத்து, தோல்விக்கான காரணங்களை விஜயகாந்த் கேட்டறிய உள்ளார். கட்சி தொடங்கிய நிலையில் தனித்து நின்று 12 சதவீத அளவுக்கு வாக்கு வங்கியைப் பெற்றது.
அதிமுக கூட்டணியில் இணைந்து 27 எம்.எல்.ஏக்கள் பெற்றதுடன், எதிர்க்கட்சித் தலைவர்பதவி கிடைத்தது என்று கட்சியினர் பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் வெற்றிக் கிடைத்தது. ஆனால் இந்த தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்ததைவிட கட்சியின் வாக்கு வங்கி 2.4 சதவித அளவுக்கு குறைந்ததும், கட்சியின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டதும் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், விஜயகாந்தை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
ஆனால் தற்போது நடந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சரியான கூட்டணி அமைக்காததால்தான் தோற்றதாக மாவட்டச் செயலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர். இதானால் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment