October 10, 2015

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர்-10 டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை!

ஒரு புதுமை பெண்ணை புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம்  படைத்திருக்கிறது'
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
'தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர்-10 டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை

எமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத்தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி எமது மண்ணில் விதைகளாக வீழ்ந்த மாவீரர்கள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளங்களிலே உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

அகப்பை பிடிக்கும் கைகளை ஆட்சி செலுத்தும் ஆளுமை கொண்ட கைகளாகவும் குரல் எழுப்பப் பேசாதிருந்த குலக் கொடிகளை ஓங்கிக் குரல் கொடுத்து உரிமை கேட்டுப்போராடும் பெண்களாகவும் படி தாண்டாதிருந்த பெண்களை படிதாண்டிப் போய் பாசறையில் உறைந்திருந்து களமாடும் பெண்களாகவும் உருவாக்கி எமது சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் எமது தேசியத் தலைவர் அவர்கள்
தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடைகளையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண் போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக கொள்கிறோம்.

பல்கலையும் கற்ற மேதைகளான பெண்களை உருவாக்கிய மண்ணிலே வீர சுதந்திரம் வேண்டி அக்கினித் தேவதைகளாக நங்கையர் நடைபோட்ட எமது மண்ணிலே இன்று பெண்களின் நிலை துயர் தருவதாக துன்பம் நிறைந்ததாக உள்ளது.

போரினாலே வாழ்கைத்துணைவர்களை இழந்ததாலும் போரினாலே வாழ்க்கைத் துணைவர்கள் அங்கவீனர்களாகி விட்டதாலும் குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் சுமக்கும் பெண்கள் பல்லாயிரம். கல்வியை கண்ணாகப் போற்றிய எமது சமூதாயத்திலே கல்வி கற்கக் பாடசாலை செல்லும் இளம் பெண்கள் படும் துன்பமோ மிகக் கொடியது. இராணுவத்தாலும் இராணுவத்தின் அருவருடிகளாலும் எமது இளம் பெண்கள் அனுபவிக்கும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியான ஒடுக்கு முறைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. மேலும் எதிரி எமது மண்ணை சமூகச் சீர்கேட்டுக்கான மேடையாக்குவதில் சாதுரியமாகச் செயற்படுகின்றான்.

தமது உரிமைக்கான குரலை இழந்து பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண்குலத்தின் விடுதலைக்காக அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். எம்மவர்களுக்காக நாம் குரல் கொடுக்காமல் அடுத்தவர்கள் செய்யட்டும் என்றிருப்பது தர்மமாகுமா?
                          நன்றி
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

No comments:

Post a Comment