September 18, 2015

காணாமல்போனோர் சான்றிதழ் வழங்க ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை!

காணாமல்போனோருக்கு சான்றிதழொன்றை வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை ஸ்ரீலங்காவின் அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக

அறிவித்துள்ளது.  ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, போரின் போதும் அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் காணாமல்போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தபோதும் அதனை காணாமல்போனோரின்  உறவினர்கள் முழுமையாக நிராகரித்திருந்த நிலையிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழைப் போல் காணாமல்போனோர் சான்றிதழை வழங்கவுள்ளதாகக் கூறினார்.
இதற்கமைய காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு காணாமல்போனோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு அதற்கான நஸ்ட ஈடுகளையும், ஏனைய சட்ட பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது நடைமுறையிலுள்ள ஸ்ரீலங்காவின் பிறப்பு, இறப்பு பதிவாளர் திணைக்கள சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை விரைவில் நிறைவேற்றவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment